மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
விலைவாசியை குறைத்திடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விலைவாசியை குறைத்திடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விலைவாசியை குறைத்திடக் கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் சிங்காரவேலன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் ராமதாஸ், பிரகலநாதன், வாசுகி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக அவர்கள் திருவண்ணாமலை ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசு விலைவாசியை குறைக்க வேண்டும்.
வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். நாட்டின் பொதுத்துறையை விற்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்று திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலை எதிரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.
இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் பகுதியில் நாகநதி ஆற்று மேம்பாலம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அப்பாசாமி தலைமையில் ஊர்வலமாக கண்ணமங்கலம் பஸ் நிலையம் வரை சென்றனர். அப்போது அவர்கள் மெயின்ரோடு பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 250 பேரை கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி
வந்தவாசி தேரடியில் உள்ள தபால் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வந்தவாசி வட்டாரக் குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. வட்டார செயலாளர் அ.அப்துல்காதர் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிந்தன், நிர்வாகிகள் பெ.அரிதாசு, சு.முரளி, கா.யாசர்அராபத் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
இதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 140 பேரை வந்தவாசி தெற்கு போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக வந்தவாசி பழைய பஸ் நிலையம் அருகில் இருந்து கட்சியினர் ஊர்வலமாக பஜார் வீதி வழியாக தேரடி சென்றடைந்தனர்.
பெரணமல்லூர்
பெரணமல்லூர் தபால் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. பெரணமல்லூர் ஒன்றிய செயலாளர் சேகரன் தலைமை தாங்கினார். முன்னதாக அவர்கள் அண்ணா சிலை முன்பு இருந்து ஊர்வலமாக தபால்அலுவலகம் வரை சென்றனர்.
சாலை மறியலில் இடைக்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், அறிவழகன், ராஜசேகரன், சரஸ்வதி, முருகன் மற்றும் கிளை செயலாளர்கள் பெருமாள், வெண்ணிலா, அஞ்சலி, கதிரவன், சிவகுருநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதையடுத்து 30 பேரை பெரணமல்லூர் போலீசார் கைது செய்தனர்.
போளூர்
போளூர் தபால் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மூ.வீரபத்திரன் தலைமையில் நடந்தது. அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 125 பேரை போலீசார் கைது செய்தனர்.