நகை-பணத்திற்காக கொத்தனார் கழுத்தை இறுக்கி படுகொலை- இளம்பெண் உள்பட 3 பேர் கைது


நகை-பணத்திற்காக கொத்தனார்  கழுத்தை இறுக்கி படுகொலை-  இளம்பெண் உள்பட 3 பேர் கைது
x

தென்காசியில் பிணமாக கிடந்தவர் வழக்கில் துப்பு துலங்கியது. நகை மற்றும் பணத்திற்காக கொத்தனாரான அவரை கொலை செய்த இளம்பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்

தென்காசி

தென்காசியில் பிணமாக கிடந்தவர் வழக்கில் துப்பு துலங்கியது. நகை மற்றும் பணத்திற்காக கொத்தனாரான அவரை கொலை செய்த இளம்பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கட்டிட தொழிலாளி

நாகர்கோவில் பேயன்புளி முள்ளிவிளை பகுதியை சேர்ந்த வெள்ளக்கண்ணு மகன் கண்ணன் (வயது 41). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு வந்து சக தொழிலாளிகளுடன் வேலை செய்து வந்தார். வாரம் ஒரு முறை வீட்டிற்கு சென்று வருவது வழக்கம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி முதல் அவரை காணவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி சிவகலா கடந்த 6-ந் தேதி நெல்லை பெருமாள்புரம் போலீசில், தனது கணவரை காணவில்லை, என்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர்.

வாலிபர் பிணம்

இந்தநிலையில் தென்காசி மங்கம்மா சாலை பகுதியில் வாலிபர் ஒருவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்த நிலையில் பிணமாக கிடப்பதாக தென்காசி கிராம நிர்வாக அதிகாரி சவுந்தரபாண்டி தென்காசி போலீசில் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிணமாக கிடந்தவரின் அருகில் குளிர்பான பாட்டில் கிடந்ததால், விஷத்தை அதில் கலந்து குடித்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

செல்போன் காட்டிக்கொடுத்தது

இந்த நிலையில் சிவகலா போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் கூறிய அடையாளங்களை வைத்து பார்த்தபோது இறந்து போனது கண்ணன் என தெரியவந்தது.

உடனே, இதுகுறித்து தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கற்பகராஜா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கண்ணனின் செல்போன் எண்ணிற்கு யார் யாரெல்லாம் தொடர்பு கொண்டார்கள் என்பதை போலீசார் கண்டுபிடித்து விசாரித்தனர். அதில் அவர் காணாமல் போவதற்கு முன்பு குறிப்பிட்ட ஒரு எண்ணில் இருந்து அதிக நேரம் பேசியது தெரியவந்தது. அந்த எண்ணை ெதாடர்பு கொண்டு விசாரித்தபோது, அது அடையகருங்குளம் கீழத்தெருவை சேர்ந்த குமார் மனைவி முத்துவடிவு (29) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தென்காசி வந்தனர்

முத்துவடிவை விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கண்ணன் கொலை செய்யப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

முத்துவடிவுக்கும், கண்ணனுக்கும் பழக்கம் இருந்துள்ளது. கடந்த 3-ந் தேதி இருவரும் நெல்லையில் ஒரு சினிமா தியேட்டரில் சினிமா பார்த்துவிட்டு குற்றாலம் வந்துள்ளனர். பின்னர் தென்காசி வந்தனர். அப்போது கண்ணனிடம் தங்க மோதிரம் மற்றும் பணம் இருப்பதை முத்துவடிவு அறிந்தார்.

கொடூரக்கொலை

இதுபற்றி அயன் சிங்கம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து (21), கருமடையூர் வடக்கு தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் அய்யப்பன் என்ற சுரேஷ் (35) ஆகியோரிடம் கூறி முத்துவடிவு அழைத்துள்ளார். பின்னர் 4 பேரும் மங்கம்மா சாலை பகுதியில் உள்ள ஒரு தேக்கு தோப்பிற்கு சென்று உள்ளார்கள். அங்கு வைத்து கண்ணனிடம் மோதிரத்தையும், பணத்தையும் கேட்டுள்ளனர்.

அவர் தர மறுக்கவே அவரது கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி அவரை கொலை செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து சுமார் 4 கிராம் தங்க மோதிரம் மற்றும் ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டனர். உடலை கீழே போட்டு இலைகளை மேலே போட்டு மூடி விட்டு நிரப்பி சென்று விட்டனர்.

விசாரணையில், முத்துவடிவு தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

கைது

இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, ரூ.4 ஆயிரம், ஒரு செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. கைதான 3 பேரும் தென்காசி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட தென்காசி போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story