கூடுவாஞ்சேரி காயரம்பேட்டில் பகலில் கொத்தனார் வேலை; இரவில் திருட்டு - வாலிபர் கைது


கூடுவாஞ்சேரி காயரம்பேட்டில் பகலில் கொத்தனார் வேலை; இரவில் திருட்டு - வாலிபர் கைது
x

கூடுவாஞ்சேரி காயரம்பேட்டில் பகலில் கொத்தனார் வேலையுடன் இரவில் திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு

கூடுவாஞ்சேரி,

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகை, வெள்ளி பொருட்கள் திருடு போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவங்களை ஈடுபடும் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தார்.

இந்த நிலையில் கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் நேற்று காலை நந்திவரம் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தார். அப்போது அந்த வாலிபர் முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த இன்ஸ்பெக்டர், அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது கூடுவாஞ்சேரி அப்துல்லா தெருவை சேர்ந்த சுமோ என்கிற சூர்யா (வயது 21), என்பதும், கூடுவாஞ்சேரி காயரம்பேடு பகுதியில் பூட்டி இருக்கும் வீடுகளில் பூட்டை உடைத்து திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்த போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நான் பகல் நேரத்தில் கொத்தனார் வேலைக்கு செல்வேன் வேலை செய்யும் பகுதியில் உள்ள பூட்டி இருக்கும் வீடுகளை பகலில் நோட்டமிட்டு கொள்வேன். இரவு நேரத்தில் அந்த வீட்டுக்குள் புகுந்து நகை பணம் வெள்ளிப் பொருட்களை திருடுவேன் திருடிய பணத்தை நண்பர்களுடன் சேர்ந்து பிரியாணி, கஞ்சா, மது குடித்து விட்டு ஜாலியாக ஊர் சுற்றுவேன் பணம் முழுவதும் காலியான பிறகு மீண்டும் கொத்தனார் வேலைக்கு செல்வேன் இப்படி வேலைக்கு செல்லும்போது கூடுவாஞ்சேரி மீனாட்சி நகர், காயரம்பேடு ஜெயா நகர் ஆகிய பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் திருடினேன் திருடிய பொருட்களை வைத்து ஜாலியாக நண்பர்களுடன் செலவு செய்தேன்.

இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமோ என்கிற சூர்யாவை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


Next Story