திண்டுக்கல் புனித வளனார் பேராலயம் சார்பில் நற்கருணை பெருவிழா-மின்தேர் பவனி
திண்டுக்கல் புனித வளனார் பேராலயம் சார்பில் நற்கருணை பெருவிழா மற்றும் மின்தேர் பவனி நடைபெற்றது.
திண்டுக்கல் புனித வளனார் பேராலயம் சார்பில் ஆண்டுதோறும் நற்கருணை பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான நற்கருணை பெருவிழா இன்று திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இதையொட்டி நடைபெற்ற சிறப்பு திருப்பலிக்கு, திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமை தாங்கினார். பாதிரியார்கள் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர். அதன்பின்னர் திண்டுக்கல் மறைவட்ட முதன்மை குரு சகாயராஜ் நற்கருணையை ஏந்தினார். பின்னர் நற்கருணை மின்தேர் பவனி தொடங்கியது.
அந்த பவனி திண்டுக்கல் நகரின் முக்கிய சாலைகள் வழியே வலம் வந்து புனித வளனார் பேராலயத்தை அடைந்தது. அங்கு, திண்டுக்கல் பெஸ்கி இல்ல நவதுறவியர் அமைப்பின் இணை இயக்குனர் மைக்கேல் பனிமயராஜ் மறையுறை ஆற்றினார். அதைத்தொடர்ந்து நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
இதில் இருபால் துறவியர், பங்கு பேரவையினர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் மறைவட்ட அதிபர் மரிய இன்னாசி மற்றும் உதவி பங்கு தந்தையர்கள் செய்திருந்தனர்.