விரைவில் திருமணம்... தாய்மாமன் தற்கொலை: சோகத்தில் நர்சிங் மாணவி எடுத்த விபரீத முடிவு

தாய்மாமன் தற்கொலையை அறிந்ததும் நர்சிங் மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்தார்
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்டனூர் ரோடு கீழத்தெருவை சேர்ந்தவர் செல்வி. இவர் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றுகிறார். மனநலம் பாதித்தோருக்கு கவுன்சிலிங் கொடுத்து வருகிறார். இவருடைய மகள் சுபஸ்ரீ (வயது 20). இவர் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெள்ளாறு பாலம் அடுத்துள்ள நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கி 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
செல்வியின் தம்பி முத்துக்குமார் (27). இவர் செல்வியின் வீட்டில் தங்கியிருந்து, திருச்சியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சுபஸ்ரீயும், தாய்மாமனான முத்துக்குமாரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து இருவருக்கும் வீட்டில் பேசி திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இதற்கிடையே சிலரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முத்துக்குமார் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மதியம் காரைக்குடியில் உள்ள அக்காள் வீட்டில் முத்துக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீடு திரும்பிய செல்வி, தனது தம்பி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே முத்துக்குமார் இறந்த தகவலை நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் சுபஸ்ரீயிடம் உறவினர்கள் தெரிவித்து அவரை அழைத்து வர சென்றுள்ளனர். அங்கு முத்துக்குமார் இறந்த தகவலை சுபஸ்ரீயிடம் அவரது சித்தி கூறியுள்ளார். இதில் மனமுடைந்த சுபஸ்ரீ விடுதி அறைக்குள் சென்று நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த விடுதி வார்டன் அறையின் கதவை தட்டியுள்ளார். வெகுநேரமாகியும் அவர் கதவை திறக்கவில்லை. உடனே அங்கிருந்தவர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அங்குள்ள மின்விசிறியில் சுபஸ்ரீ தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுபஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் காதலனும், அதை தொடர்ந்து காதலியும் வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்தின.