மயிலாடுதுறை நகரசபை கூட்டம்


மயிலாடுதுறை நகரசபை கூட்டம்
x

மயிலாடுதுறை அருகே உள்ள மணக்குடியில் ரூ.24 கோடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட உள்ளதாக நகரசபை கூட்டத்தில் அதன் தலைவர் கூறினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகரசபை கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-

இலக்கியா (தி.மு.க.): கூட்டம் 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியுள்ளது. இனி, குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்தை தொடங்க வேண்டும்.

ரமேஷ் (தி.மு.க.): பூம்புகார் சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி வடிகால் வாய்க்காலில் தேங்கி நிற்கிறது.

சம்பத் (தி.மு.க.): கிட்டப்பா பாலம் சுடுகாட்டில் கருமாதி மண்டபம் கட்டித் தர வேண்டும்.

குடிநீர் இணைப்பு

ரத்தினவேல் (தி.மு.க.): திருமஞ்சனவீதி, எடத்தெரு சந்திப்பில் தனியார் பால் பண்ணை எதிரில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி மழைநீர் வடிகாலில் சென்று நீர் நிலைகளில் கலக்கிறது.

கீதா(தி.மு.க.): சிவசக்தி நகரில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.

தனலட்சுமி (அ.தி.மு.க.): ஆர்.பி.என். நகரில் இருந்து அண்ணாநகர் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.

காந்தி (பா.ம.க): ஆனந்த தாண்டவபுரம் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் பல லட்சம் மதிப்புள்ள எந்திரங்கள் செயல்படுத்தப்படாமல் வீணாக வைக்கப்பட்டுள்ளது.

சணல் குமார் (நகராட்சி பொறியாளர்) : ஆட்கள் பற்றாக்குறையின் காரணமாக அந்த எந்திரங்கள் இயக்கப்படாமல் உள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து மீண்டும் இயக்கப்படும்.

பாதாள சாக்கடை கழிவுநீர்

ராமச்சந்திரன்(அ.தி.மு.க.): எனது வார்டில் மலேரியா காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்டதையடுத்து தெருக்களை சுத்தம் செய்ய வேண்டும்.

ரஜினி (தி.மு.க.): ரயிலடி வடுகத்தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது.

கணேசன் (ம.தி.மு.க.): திருவிழந்தூர் ஆராயத்தெருவில் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறி வருகிறது.

கல்யாணி ரகு (தி.மு.க.): திருவிழந்தூர் அம்பேத்கர் நகரில் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக பாதாள சாக்கடை கழிவு நீரும், குடிநீரும் ஒன்றாக கலந்து வருகிறது.

ஜெயந்தி (அ.தி.மு.க.): காமராஜர் பஸ் நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை சுகாதாரமின்றி மோசமான நிலையில் உள்ளது.

இதேபோல உறுப்பினர்கள் பலர் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.

ரூ.24 கோடியில் பஸ் நிலையம்

தலைவர்: உறுப்பினர்களின் அனைத்து ேகாரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு படிப்படியாக நிறைவேற்றி தரப்படும். மயிலாடுதுறை அருகே மணக்குடியில் ரூ.24 கோடியில் புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வருகிற செப்டம்பர் 9-ந்தேதி டெண்டர் விடப்பட உள்ளது என்றார்.

முடிவில் நகரசபை துணைத்தலைவர் சிவகுமார் நன்றி கூறினார்.



Next Story