தச்சநல்லூர் மண்டலத்தில் மேயர் பி.எம்.சரவணன் ஆய்வு
நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்தில் மேயர் பி.எம்.சரவணன் ஆய்வு செய்தார்.
நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 4-வது வார்டு பாளையங்கோட்டை பொட்டல், காமராஜர் நகர் பகுதியில் மேயர் பி.எம்.சரவணன் நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது காமராஜர் நகர் பகுதியில் கோவிலை சுற்றி சுற்றுச்சுவர் கட்டவும், சிறிய நீர்த்தேக்க தொட்டி மற்றும் சாலை வசதி, தெரு விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.மேலும் பொட்டல் பகுதியில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு பட்டியல் குறித்து கேட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தார். அங்கன்வாடிக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு செய்திட மாநகராட்சி அலுவலர்களிடம் அறிவுரை வழங்கினார்.
பொட்டல் காயத்ரி தெரு மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கவும், படப்பைகுறிச்சியில் 2 பாலங்கள் கட்டவும், வ.உ.சி. தெருவில் சிறிய நீர்த்தேக்க தொட்டி மற்றும் புதிய குடிநீர் இணைப்பு வழங்கிடவும், பெரியபாளையம் பகுதியில் பழுதடைந்த கழிப்பறையை புதுப்பிக்கவும், சாலை வசதி ஏற்படுத்திடவும், பெருமாள் கோவில் தெருவில் கழிவுநீரோடை கட்டவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர் கிறிஸ்டி, உதவி செயற்பொறியாளர் சரவணகுமார், பொறியாளர் லெனின், சுகாதார அலுவலர் சாகுல்ஹமீது, சுகாதார ஆய்வாளர் சங்கர நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.