வணிக வளாக பணிகளை மேயர் சரவணன் ஆய்வு
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் கண்காட்சி அரங்கு, வணிக வளாக பணிகளை மேயர் சரவணன் ஆய்வு செய்தார்.
தச்சநல்லூர்:
நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல பகுதியில் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் பி.எம்.சரவணன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகராட்சி மைய அலுவலகம் எதிரே 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 2 கண்காட்சி அரங்குகள் மற்றும் கார் பார்க்கிங் வசதியுடன் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் ஆகியவற்றை பார்வையிட்டார். இங்கு விரைவில் கண்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் தச்சநல்லூர் 12-வது வார்டு உடையார்பட்டி ரெங்கநாதன் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல்வாழ்வு மையம், தச்சநல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து 28-வது வார்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் சிறுவர் விளையாட்டு பூங்காவில் அமைய உள்ள நீச்சல் குளம், வாகன காப்பகம், ஸ்கேட்டிங், பூப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் தொடர்பான கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு, கவுன்சிலர்கள் கோகிலவாணி சுரேஷ், நித்திய பாலையா, சந்திரசேகர், தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் (பொறுப்பு) வாசுதேவன், உதவி செயற்பொறியாளர் லெனின், இளநிலை பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.