ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் ஆய்வு
பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் ஆய்வு செய்தார்.
பேட்டை:
பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு நடைபெற்ற வாராந்திர தடுப்பூசி போடப்படும் பணியினை பார்வையிட்டு மருந்தாளுனர்களிடம் மருந்துகள் கையிருப்பு குறித்தும், மருத்துவ உபகரணங்களின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் மருத்துவமனையில் படுக்கை வசதி, வளாகத்தினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க அறிவுறுத்தினார். பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளின் வருகை பதிவேட்டையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கவுன்சிலர் நித்தியபாலையா, டாக்டர் ராணி, உதவி செயற்பொறியாளர் பைஜூ, உதவி பொறியாளர் பட்டுராஜன் உள்ளிட்டவர்கள் உடன் சென்றனர்.
நெல்லை மண்டலம் 18-வது வார்டு திருமங்கை நகர் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் தமிழ்நாடு நகர்ப்புற உள் கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைக்கப்படுகிறது. இந்த பணியை மேயர் பி.எம்.சரவணன் தொடங்கி வைத்தார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார்.
மேலும் பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரி செல்லும் ரோடு மற்றும் சுத்தமல்லி விலக்கு பகுதிகளில் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை பார்வையிட்டு, அதனை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.