மாயூரநாதசாமி கோவில் குடமுழுக்கு விழா முன்னேற்பாடு பணிகள்


மாயூரநாதசாமி கோவில் குடமுழுக்கு விழா முன்னேற்பாடு பணிகள்
x
தினத்தந்தி 3 Sept 2023 12:15 AM IST (Updated: 3 Sept 2023 10:25 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாயூரநாதசாமி கோவில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாயூரநாதசாமி கோவில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மாயூரநாதசாமி கோவில் குடமுழுக்கு

மயிலாடுதுறையில் மாயூரநாதசாமி கோவில் குடமுழுக்கு இன்று காலை 7.30 மணியளவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு,விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், குடமுழுக்கினை பார்வையிடுவதற்கு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் ஆகியவைகள் குறித்து கலெக்டர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருபர்களிடம் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:

மயிலாடுதுறையில் மாயூரநாதசுவாமி கோவில் குடமுழுக்கு திருவாவடுதுறை ஆதீனம் ஒருங்கிணைப்புடன் இன்று நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போலீஸ் துறையை பொருத்தமட்டில் 2 போலீஸ் சூப்பிரண்டுகள், 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 7 துணை போலீஸ் சூப்பிரண்டு, 16 இன்ஸ்பெக்டர்கள், 36 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட மொத்தம் 510 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

18 வருடங்களுக்கு பிறகு...

மேலும் கோவிலில் உட்பிரகாரம்,வெளி பிரகாரங்களில் 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ துறையின் சார்பில் 4 மருத்துவ குழுக்களும், நகராட்சித்துறையின் சார்பில் 6 தற்காலிக குடிநீர் டேங்குகளும் வைக்கப்பட்டுள்ளது. 150 துப்புரவு பணியாளர்களும், 4 நடமாடும் குப்பை சேகரிப்பு வாகனமும் தூய்மை பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். 3 அவசர ஆம்புலன்ஸ் வாகனம், 2 தீயணைப்பு வாகனம், 5 தற்காலிக கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

18 வருடங்களுக்கு பிறகு இக்குடமுழுக்கு நடைபெறுவதால் 75 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் வருகையையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றார். ஆய்வின் போது கூடுதல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால், இணை இயக்குனர் (சுகாதாரத்துறை) குருநாதன் கந்தையா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சஞ்சீவ்குமார், நீலகண்டன், ராஜ்குமார், மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், கோவில் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story