ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
நெல்லையில் ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருவதாக கூறியும், அவரை அந்த பொறுப்பில் இருந்து உடனடியாக மாற்ற குடியரசு தலைவரை வலியுறுத்தியும் நெல்லை டவுன் காந்தி சிலை முன்பு நேற்று நெல்லை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் கலந்துகொண்டு முதல் கையெழுத்தை போட்டு தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கரிசல்சுரேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லை மாவட்ட செயலாளர் பாட்டப்பத்து முகமது அலி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உவரி ரைமண்ட் மற்றும் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். இதில் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடமும் கையெழுத்து பெற்றனர். முன்னதாக காந்தி சிலைக்கு மேயர் பி.எம்.சரவணன் மற்றும் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம் மாலை அணிவித்தனர்.