பத்திரப்பதிவுத்துறையில் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் மூர்த்தி


பத்திரப்பதிவுத்துறையில் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் மூர்த்தி
x

பத்திரப்பதிவுத்துறையில் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

நெல்லை,

நெல்லை மண்டலத்தில் பத்திரப்பதிவுத்துறையில் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் சிவன்அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு மண்டல அளவில் பதிவுத்துறையில் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:-

வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறையின் வருவாயை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டு மாத காலமாக சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. அதன் அறிக்கை துறைச் செயலாளர் பதிவுத்துறை தலைவர் உள்ளிட்டோர் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் பல்வேறு தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளது தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறையில் வருவாய் கடந்த எட்டு மாத காலத்தில் 24 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அதிகம் பெறப்பட்டுள்ளது. பதிவுத்துறையில் உள்ள சார்பதிவாளர்கள் தவறுதலாக பதிவு செய்த பத்திரங்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு சார்பதிவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் தமிழகத்தில் ஆறு லட்சத்து 20 ஆயிரத்து73 வணிகர்கள் உறுப்பினர்களாக உள்ள நிலையில் புதியதாக ஒரு லட்சத்து 21 ஆயிரம் வணிகர்கள் இணைந்துள்ளனர். பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறையில் 2023 மார்ச் 30ஆம் தேதிக்குள் ஒன்றரை லட்சம் கோடி வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு பிரச்சனை, பட்டா மாறுதல் பிரச்சனைகளை தடுக்கும் விதமாக மாவட்டத்தில் உள்ள தாலுகாக்களின் கீழ் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

போலி பத்திரப்பதிவுகளை தடுக்கும் விதமாக புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி தமிழகம் முழுவதும் 2000 பத்திரங்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழக பத்திரப்பதிவு துறையின் சிறப்பான செயல்பாடுகளை ஆந்திர மற்றும் கர்நாடக மாநில பதிவுத்துறை அதிகாரிகள் நேரில் வந்து பயிற்சி பெற்று செல்கின்றனர்.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் வர உள்ளனர். வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறையில் 39 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் பர்ச்சேஸ் குறித்து வணிகர்களிடம் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. வணிகர்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் அரசு துன்புறுத்தாது.

வணிகர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு அரசு ஆதரவாக இருக்கும். வணிகர்களை முன்னேற்றக் கூடிய வகையில் தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பத்திரபதிவு செய்வதற்கான தொகையை அதிகரிக்கும் எண்ணம் தற்போது அரசுக்கு இல்லை தேவைப்பட்டால் முதலமைச்சரிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story