பேரிடர் காலங்களில் கால்நடைகளின் உயிரிழப்பை தடுக்கும் வழிமுறைகள்


பேரிடர் காலங்களில் கால்நடைகளின் உயிரிழப்பை தடுக்கும் வழிமுறைகள்
x
தினத்தந்தி 20 Jun 2023 6:45 PM GMT (Updated: 21 Jun 2023 9:52 AM GMT)

பேரிடர் காலங்களில் கால்நடைகளின் உயிரிழப்பை தடுக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், கால்நடை மருத்துவத்துறை உதவி பேராசிரியருமான மு.சபாபதி விளக்கம் அளித்துள்ளார்.

திருவாரூர்

பேரிடர் காலம்

திருவாரூர் மற்றும் நாகை போன்ற கடலோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் மழை, வெள்ளம் மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் நோய் தொற்று ஏற்படுவதால் கால்நடைகள் உயிரிழந்து பொருளாதார பேரிழப்பும் ஏற்படுகிறது. சிறு சிறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இந்த பெரிய அளவு பொருளாதார பாதிப்பை தவிர்க்க இயலும்.

மழைக்காலங்களில் நோய் தொற்றினால் கால்நடைகள் உயிரிழந்து வருகின்றன.. மழைக்காலங்களில் கொட்டகையை ஈரப்பதம் மிகாமல் வைத்திருப்பது மிகவும் அவசியம். மாட்டு கொட்டகைகளின் கூரைகள் ஒழுகாத வண்ணம் பராமரிக்க வேண்டும்.

பசுமாடுகளுக்கு மடி நோய்

மாட்டு கொட்டகை தரையை வழுவழுப்பாக இல்லா வண்ணம் நன்கு சுரண்டி தேய்த்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தரை ஈரப்பதமாகவும் அதிக சாணத்துடன் கிடப்பதால் பசுக்கள் கீழே படுத்திருக்கும் போது மடி முழுவதும் சாணம் மற்றும் குப்பைகளால் அழுக்காவதால் மடி நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. பசுமாடுகளுக்கு மடி நோய் வந்தால் குறைந்த அளவு பால் தான் கொடுக்கும்.

ஒரு சில மாடுகள் நிரந்தரமாக ஒரு காம்பினை இழக்க நேரிடும். பால் கறப்பதற்கு முன்னும், பின்னும் மடியை நன்கு கழுவி உலர்ந்த சுத்தமான துணியால் துடைத்து விட வேண்டும். மழைக்காலங்களில் கிருமிகளில் வீரியம் கூடி நோய் தொற்று ஏற்படுவதால் தோல் கழலை, வாய்க்காணை, தொண்டை அடைப்பான் மற்றும் சப்பை நோய்களுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

காப்பீடு செய்து கொள்ளலாம்

அனைத்து தடுப்பூசிகளும் போடப்படவில்லையெனில், குறைந்தபட்சம் வாய்க்காணை மற்றும் தோல் கழலை நோய்களுக்கான தடுப்பூசிகளை 15 நாள் இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும். இளங்கறவை மாடுகள் காப்பீடு செய்யப்படாமல் விடப்பட்டிருந்தால் அருகில் உள்ள கால்நடை மருத்துவர் அல்லது காப்பீட்டு நிறுவனத்தை அணுகி அனைத்து இளம் கறவை பசுக்களையும் காப்பீடு செய்து கொள்ளலாம். மழை காலத்தில் மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லாது.

அப்போது ஒரு வாரம் வரை தேவையான பசும்புற்களை கையிருப்பு வைத்து கொள்ள வேண்டும். அறுவடை செய்யப்பட்ட புற்களை தலைகீழாக அரை மணி நேரம் மழை நீர் வடிய விட்டு, உலர்த்தி பின்பு தினமும் மாட்டிற்கு உணவிடலாம். இளம் கன்றுகள் மற்றும் நல்ல கறவை பசுக்களுக்கு உயிர்ச்சத்து நிறைந்த விட்டமின் டானிக்கை தினமும் 50 முதல் 100 மில்லி வரை கொடுத்து வருவதால் அவற்றின் நோய் எதிர்ப்பு திறனையும் அதிகரிக்க செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story