டெங்கு, மலேரியா பரவாமல் தடுக்க நடவடிக்கை
டெங்கு, மலேரியா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நெமிலி,
டெங்கு, மலேரியா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். டெங்கு, மலேரியா பரவாமல் தடுக்க முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் பழுதடைந்துள்ள பள்ளி, அங்கன்வாடி கட்டிடம் மற்றும் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன்ராஜ், வட்டார கல்வி அலுவலர் மீனாட்சி, ஒன்றியகுழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.