சமூக பதற்றத்தை நீக்கி, அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை: சிறையில் சிறப்பு கோர்ட்டு அமைத்து வக்கீல் கொலை வழக்கை விசாரியுங்கள்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


சமூக பதற்றத்தை நீக்கி, அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை: சிறையில் சிறப்பு கோர்ட்டு அமைத்து வக்கீல் கொலை வழக்கை விசாரியுங்கள்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

தூத்துக்குடி வக்கீல் கொலை வழக்கை விசாரிக்க பாளையங்கோட்டை சிறையில் சிறப்பு கோர்ட்டு அமைத்து நாள்தோறும் விசாரித்து 2 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


வக்கீல் கொலை வழக்கு

தூத்துக்குடி சோரீஸ்புரத்தை சேர்ந்தவர் வக்கீல் முத்துக்குமார். அடகுக்கடை நடத்தி வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் தனது கடை அருகில் காரில் இருந்து இறங்கியபோது, அவரை சிலர் வெட்டிக்கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் எஸ்.சி., எஸ்.டி. சட்டப்பிரிவு உள்ளிட்டவற்றின்கீழ் வழக்குபதிவு செய்து, 15-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

ஆத்திப்பழம் என்பவர் கொலைக்கு பழிக்குப்பழியாக வக்கீல் முத்துக்குமாரின் சகோதரர் சிவகுமார், கடந்த 2019-ம் ஆண்டில் கொல்லப்பட்டதாகவும், அந்த சம்பவத்தில் கைதானவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவிடாமல் வக்கீல் முத்துக்குமார் தடுத்து வந்ததால் அவரை எதிர்தரப்பினர் கொன்றதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

ஜாமீன் மனு தள்ளுபடி

வக்கீல் முத்துக்குமார் கொலையில் கைதான சுதர்சன் தனக்கு ஜாமீன் கேட்டு தூத்துக்குடி கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதனால் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரருக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரது வங்கிக்கணக்கில் இருந்து பணப்பரிமாற்ற காரணத்தை வைத்து கைது செய்துள்ளனர். அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என வாதாடினார்.

அரசு குற்றவியல் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, மனுதாரர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். கொலைக்கு சதி திட்டம் தீட்டியதில் மனுதாரருக்கு பங்கு உள்ளது. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஆட்சேபம் தெரிவித்தார்.

சிறையில் சிறப்பு கோர்ட்டு

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

வக்கீல் முத்துக்குமார் கொலை வழக்கில் மனுதாரர் சுதர்சனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வலுவாக உள்ளன. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க இந்த கோர்ட்டு விரும்பவில்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் கைதானவர்களில் பலர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கு விசாரணையை முறையாக நடத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்கிறோம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கு விவகாரத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக இந்த கோர்ட்டு கருதுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் சமூக பதற்றத்தை நீக்கி, அமைதியை ஏற்படுத்த கோர்ட்டுக்கு அரசியலமைப்புச்சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது. அதன்படி இந்த கொலை வழக்கை விசாரிப்பதற்காக பாளையங்கோட்டை சிறை வளாகத்தில் சிறப்பு கோர்ட்டு அமைக்க வேண்டும். அங்கு நாள்தோறும் இந்த வழக்கை விசாரித்து 2 மாதத்தில் முடிக்க வேண்டும்.

வீடியோ கான்பரன்சிங்

இதற்கு தேவையான வசதிகளை பாளையங்கோட்டை சிறை சூப்பிரண்டு செய்து தர வேண்டும். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறை வளாகத்தில் இருந்து சாட்சிகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்கலாம். குற்றம் சாட்டப்பட்டு உள்ள ஒவ்வொருவருக்கும் 2 வக்கீல்களை நியமித்து கொள்ள அனுமதிக்க வேண்டும். அவர்களை முழுமையாக சோதனை செய்த பின்பு சிறை வளாகத்திற்குள் அனுமதிக்கலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story