மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:46 PM GMT)

திருவாரூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாமை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

திருவாரூர்


திருவாரூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாமை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

மருத்துவ முகாம்

திருவாரூர் ஒன்றியம் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வியின் கீழ் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாமினை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் இன்று (நேற்று) முதல் வருகிற 31-ந் தேதி வரை 10 ஒன்றியங்களிலும் நடைபெறவுள்ளது. இம்முகாமிற்கு முட நீக்கியல் டாக்டர், காது, மூக்கு, தொண்டை டாக்டர், மனநல டாக்டர், கண் டாக்டர், மருத்துவ உளவியல் நிபுணர், செவித்திறன் ஆய்வாளர் மற்றும் கண் பரிசோதனை ஆய்வாளர் ஆகியோர் சார்ந்த மருத்துவ குழுவினர், மாற்றுத்திறனாளி குழந்தைகளை மதிப்பீடு செய்து, தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை, இலவச பஸ் மற்றும் ரெயில் பயணச்சலுகை, தேவையான உதவி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.

பயனடையலாம்

எனவே இம்முகாமில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகள், இல்லம் சார்ந்த குழந்தைகள் மற்றும் பள்ளி ஆயத்த பயிற்சி மையத்திற்கு வரும் குழந்தைகள் கலந்து கொண்டு பயனடையலாம் என்றார்.

முகாமில் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா, மாவட்ட கல்வி அலுவலர் மாதவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, சுப்ரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து, துணைத்தலைவர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story