பரிகார பூஜை செய்வதாக கூறி தர்மபுரியில் கடத்தப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி மீட்பு; நகையை திருடி கொண்டு ஓடிய மந்திரவாதிக்கு வலைவீச்சு


பரிகார பூஜை செய்வதாக கூறி தர்மபுரியில் கடத்தப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி மீட்பு; நகையை திருடி கொண்டு ஓடிய மந்திரவாதிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 8 Jun 2023 1:00 AM IST (Updated: 8 Jun 2023 6:39 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி

பரிகார பூஜை செய்வதாக கூறி தர்மபுரியில் கடத்தப்பட்ட அரசு மருத்துவ கல்லூரி மாணவி மீட்கப்பட்டார். அவரிடம் நகையை திருடிக் கொண்டு ஓடிய மந்திரவாதியை போலீசார் தேடி வருகிறார்கள்.

மாணவி மாயம்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டி பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவி தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவி வீட்டில் இருந்து கல்லூரிக்கு பஸ்சில் சென்று வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் மாணவி கல்லூரிக்கு சென்றார்.

இந்த நிலையில் சில மணி நேரம் கழித்து அந்த மாணவி கல்லூரிக்கு வரவில்லை என்று கல்லூரியில் இருந்து தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கடத்தல்

அதன் பேரில் போலீசார் மாணவி கடத்தப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள். தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மேற்பார்வையில் 3 தனிப்படை போலீசார் மாணவியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மாணவி சென்னையில் இருப்பதும், அந்த மாணவி கடத்தப்பட்டு இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் சென்னைக்கு சென்று மாணவியை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது.

மந்திரவாதிக்கு வலைவீச்சு

மாணவி பஸ்சில் வரும்போது அறிமுகமான ஒரு 50 வயது மதிக்கத்தக்க நபர் உங்கள் குடும்பத்திற்கு தோஷம் உள்ளது. உனது தந்தைக்கு நேரம் சரியில்லை. உங்கள் குடும்பம் நன்றாக இருக்க பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பின் சென்னை செல்லும் பஸ்சில் மாணவியை அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது மாணவி அணிந்திருந்த 2 பவுன் நகையை திருடிக் கொண்டு அந்த நபர் பஸ்சில் இருந்து இறங்கி சென்று விட்டது தெரியவந்தது. மந்திரவாதி என்று கூறி மருத்துவ கல்லூரி மாணவியை கடத்தி நகையை திருடிக் கொண்டு ஓடிய மர்ம நபர் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story