பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை
ராணிப்பேட்டையில் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் ஆண்டு விழா கலெக்டர் வளர்மதி தலைமையில் நடந்தது. இத்திட்டம் குறித்து மாணவிகளுக்கு இடையே நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட அட்டை, மருத்துவ காப்பீடு திட்டத்தில் நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்த மருத்துவமனைகளுக்கு பாராட்டு சான்றிதழ், காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெற்று குணம் அடைந்த பயனாளிகளுக்கு நினைவு பரிசுகளையும் கலெக்டர் வழங்கினார்.
விழாவில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் விஜயா முரளி, துணை இயக்குனர் மணிமாறன், டாக்டர்கள் ஜெயஸ்ரீ, பிரீத்தி, மருத்துவ காப்பீடு திட்ட ஒருங்கிணைப்பாளர் வாசுதேவ நாயர், வெங்கடேசன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.