36 ஆண்டுகளுக்கு பின்னர் முன்னாள் மருத்துவ மாணவர்கள் சந்திப்பு


36 ஆண்டுகளுக்கு பின்னர் முன்னாள் மருத்துவ மாணவர்கள் சந்திப்பு
x
தினத்தந்தி 1 Oct 2023 9:11 AM GMT (Updated: 1 Oct 2023 10:59 AM GMT)

முன்னாள் மருத்துவ மாணவர்கள் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்து நெகிழ்ச்சி அடைந்தனர்.

செங்கல்பட்டு

சென்னையில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் 1987-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து முடித்த 60 மாணவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சீனா, பெல்ஜியம், டென்மார்க் போன்ற நாடுகளிலும் டாக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் செல்வகுமார், மாமல்லபுரம் டாக்டர் இந்திராகாந்தி ஆகியோர் ஒரு வாட்ஸ்-அப் குழுவை ஏற்படுத்தி அந்த குழுவில் உடன் படித்த அனைத்து மருத்துவ மாணவ-மாணவிகளையும் ஒருங்கிணைத்தனர். பிறகு உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் ஆஸ்பத்திரியில் டாக்டர்களாக உள்ள அனைவரிடமும் பேசி அந்த வாட்ஸ்-அப் குழுவில் அனைவரையும் இணைத்தனர். அந்த குழுவில் தங்கள் குடும்ப சூழல், அவரவர் செய்யும் மருத்துவ பணிகள், சொந்த ஆஸ்பத்திரியின் மருத்துவ சேவைகள், வெளிநாட்டில் மருத்துவ துறையில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிகள், கேன்சர் போன்ற வைரஸ் நோய்களுக்கு புதிய மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பரிமாறி கொண்டனர். முதல் கட்டமாக அனைவரும் 36 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரம் புராதன சின்னங்களில் ஒன்று கூடி சந்திக்க முடிவு செய்தனர்.

36 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் பழைய நண்பர்களை சந்திக்க வெளிநாடுகளில் இருந்து கடல் கடந்து 25 பேரும், இந்தியாவில் இருந்து 35 பேர் என மொத்தம் 60 பேர் நேற்று மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறை வளாகத்தில் ஒன்று கூடினர். அங்கு அனைவரும் இணைந்து குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அதேபோல் அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்த்து அனைவரும் குடும்பம், குடும்பமாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். பிறகு மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அனைவரும் ஒன்று கூடி சந்தித்து 36 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த சந்தோஷத்தில் பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர். 60 பேரும் தற்போது இதயம், சிறுநீரகம், மகப்பேறு, நீரிழிவு, ஆர்த்தோ உள்ளிட்ட பிரிவு மருத்துவ நிபுணர்களாக பணியாற்றி வருகின்றனர்.


Next Story