மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசு மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரபேக்கால் தலைமை தாங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட துணைத்தலைவர் வெண்மணி, சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜெயபாண்டி, மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களை ஊழியர்களாக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் ரூ.26 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். கருவுறும் ஊழியர்களுக்கு மகப்பேறு சலுகை வழங்க வேண்டும். அரசே அனைவருக்கும் சீருடை, அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல், கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டு, போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டியில் அருந்ததியர் மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். நாகர்கோவிலில் வீட்டுமனைப்பட்டா கேட்டு போராடிய மக்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.