சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ்பெரு நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்


சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ்பெரு நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் பெரு நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பெருநிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெருந்தொழில் நிறுவனங்கள், தங்களது சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களை, மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையுடன் இணைந்து பணிகளை தேர்வு செய்து மேற்கொள்ள வேண்டும். இப்பணிகள் பொதுமக்களுக்கு பயனளிப்பதாகவும், அவர்களின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகவும் அமைய வேண்டும்.

வாழ்வாதாரம் மேம்பாடு

பெருநிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்பு நிதியை நமக்கு நாமே திட்டத்தின் மூலம் வழங்கி கூடுதலாக அதிக பணிகளை மேற்கொள்ளலாம். ஊரக வளர்ச்சி துறையில் குடிநீர் திட்டங்கள், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வட்டங்களில் உள்ள மலை கிராமங்களில் வாழும் பழங்குடியினருக்கு வீடுகள் மற்றும் குடிநீர் வசதிகள் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.மேலும், பள்ளிக்கல்வித்துறை சார்பாக புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டுதல், பள்ளி கட்டிடங்கள், கழிப்பறைகள், மாணவ, மாணவிகளுக்கு தளவாட சாதனங்கள் வழங்குதல், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மகளிர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளலாம்.

முன்னுரிமை

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களில் வீடுகள் கட்டி தருதல், விடுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தருதல், வன விலங்குகளிடமிருந்து விளை நிலங்கள் மற்றும் உயிர் சேதங்களை தடுக்கும் வண்ணம் பாதுகாப்பு வேலிகள் அமைத்தல் போன்ற பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, உதவி கலெக்டர்கள் சரண்யா, பாபு, தொழிலக பாதுகாப்புத்துறை துணை இயக்குனர் இளவரசி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, தனி தாசில்தார்கள் ஜெய்சங்கர், விஜயகுமார், பெருநிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story