தர்மபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


தர்மபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Aug 2023 12:30 AM IST (Updated: 26 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

விவசாயிகளுக்கு இழப்பீடு

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) பிரியா, வேளாண்மை இணை இயக்குனர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் சராசரி அளவைவிட தற்போது குறைவாக மழை பெய்துள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்துள்ள சிறுதானிய பயிர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. எனவே தர்மபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.40-ஆக உயர்த்த வேண்டும்.

பயிர் காப்பீடு

கரும்பு சாகுபடிக்கான செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. கரும்பு வெட்டு கூலியும் அதிகரித்துள்ளது. எனவே கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். கரும்பு வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும். கரும்பில் வேர்ப்புழு தாக்குதல் காரணமாக ஏற்படும் பயிர் சேதத்தை தடுக்க வேண்டும்.

பாரம்பரிய நெல் ரகங்களுக்கான விதைகளை குறித்த பருவகாலத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கூட்டு பட்டாக்களை தனி பட்டாக்களாக மாற்றி வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் பயிர்களுக்கான காப்பீட்டை உடனடியாக தொடங்க வேண்டும். தர்மபுரி- பொம்மிடியை இணைக்கும் கோம்பேரி கணவாய் பகுதியில் சாலை அமைக்கும் திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும்.

நீர்ப்பாசன திட்டங்கள்

விவசாயிகளுக்கு பயன்படுவதற்கு மானிய விலையில் வழங்கப்படும் டிராக்டர், பவர் டில்லர் உள்ளிட்ட கருவிகள்நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாக விதிகளை மீறி தனி நபர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தவேண்டும். இத்தகைய விதி மீறல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நீர் பாசன திட்டங்களை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அரூர் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைக்கு செல்வோரிடம் ஆவணங்கள் கேட்பதை தவிர்க்க வேண்டும். அங்கு சிகிச்சையின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள்.

மானிய உதவி

இந்த கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசுகையில், வேளாண்மை துறை சார்ந்த அனைத்து திட்டங்கள் விவசாயிகளுக்கு முழுமையாக சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்என்றுகூறினார். கூட்டத்தில்பட்டு விவசாயிகள் 63 பேருக்கு ரூ.10 லட்சத்து 13 ஆயிரம் மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சாமிநாதன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாத்திமா உள்பட அதிகாரிகள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story