மத்திய அரசு விதித்துள்ள 5 சதவீத வரியை திரும்ப பெற வேண்டும்

மத்திய அரசு விதித்துள்ள 5 சதவீத வரியை திரும்ப பெற வேண்டும் என அரிசி ஆலை உரிமையாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. மதுரை மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் கிஷோர் வரவேற்றார். மாநில சம்மேளன துணை தலைவர் வசந்தவேல் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் துளசிங்கம் தலைமை தாங்கினார். மாநில சம்மேளன பொது செயலாளர் மோகன் சிறப்புரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில், அரிசி, கோதுமை மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்களும் 25 கிலோவிற்கு கீழ், பையில் அடைத்து குறியீடுகளோடு விற்பனை செய்தால் 5 சதவீத வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்பால் நடுத்தர சாமானிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே மத்திய மாநில அரசுகள் அத்தியாவசிய உணவு பொருட்களின் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
வேளாண்மை சார்ந்த அரிசி ஆலைகளுக்கு தற்போது மின்துறை அறிவித்துள்ள மின் உயர்வில் விலக்கு அளிக்க வேண்டும். ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மட்டுமே நெல்லிற்கு சந்தை கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில், மதுரை மாவட்ட துணை தலைவர் ஜானிகிராமன், பொது செயலாளர் அன்பரசன், பொருளாளர் சிவசந்துரு உள்ளிட்ட மாவட்ட, மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
=======






