அனைத்து கடைகளிலும் 6 மாதங்களில் தமிழில் பெயர் பலகை வைக்கப்படும்; ஈரோட்டில் விக்கிரமராஜா பேட்டி


அனைத்து கடைகளிலும் 6 மாதங்களில் தமிழில் பெயர் பலகை வைக்கப்படும்; ஈரோட்டில் விக்கிரமராஜா பேட்டி
x

அனைத்து கடைகளிலும் 6 மாதங்களில் தமிழில் பெயர் பலகை வைக்கப்படும் என்று ஈரோட்டில் விக்கிரமராஜா கூறினார்.

ஈரோடு

அனைத்து கடைகளிலும் 6 மாதங்களில் தமிழில் பெயர் பலகை வைக்கப்படும் என்று ஈரோட்டில் விக்கிரமராஜா கூறினார்.

வணிகர் தின மாநாடு

வணிகர் தினத்தையொட்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் உரிமை முழக்க மாநாடு ஈரோடு அருகே கங்காபுரம் டெக்ஸ்வேலி மைதானத்தில் வருகிற மே மாதம் 5-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பந்தல் கால்கோள் விழா நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு பேரமைப்பு ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல் தலைமை தாங்கினார். கோவை மண்டல தலைவர் சந்திரசேகரன், மாநில நிர்வாகிகள் ராஜ்குமார், ராஜசேகரன், சக்திவேல், தேவராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்று பேசினார்.

ஆன்லைன் மருந்து விற்பனை

விழாவில் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்துகொண்டு பந்தல் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

மே மாதம் 5-ந் தேதி நடக்கும் வணிகர் தின மாநில மாநாடு ஈரோட்டில் நடக்கிறது. இந்த மாநாட்டில் மத்திய மந்திரிகள், தமிழக அமைச்சர்கள் கலந்துகொள்கிறாா்கள். 7 லட்சம் வணிகர்கள் பங்கேற்க உள்ளனர். 3 ஆண்டு உரிமை முறையையும், வணிகர் நல வாரியத்தையும் முதல்-அமைச்சர் உடனடியாக அறிவிக்க வேண்டும். ஈரோட்டில் நேதாஜி காய்கறி மார்க்கெட், ஜவுளி மார்க்கெட்டில் புதிய கட்டிடத்தில் உரிய வாடகையை நிர்ணயித்து வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கி கொடுக்க வேண்டும்.

பெரிய நிறுவனங்களில் காலாவதியான பொருட்களை பேக்கிங் இல்லாமல் விற்பனை செய்கிறார்கள். மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்வதை முழுமையாக தடை செய்ய வேண்டும்.

தமிழ் பெயர் பலகை

தமிழகம் முழுவதும் தமிழ் மொழியில் பெயர் பலகை இருக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புக்கு மாற்று கருத்து கிடையாது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று தமிழ்நாடு முழுவதும் 6 மாதங்களுக்குள் அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகைகள் ைவக்கப்படும்.

தமிழ் மொழி இல்லாத பெயர் பலகைகளை அகற்ற வேண்டும் என்றும், அகற்றவில்லை என்றால் கருப்பு மை பூசுவோம் என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்து உள்ளார். இந்த நிலைபாட்டை டாக்டர் ராமதாஸ் திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் நிர்வாகிகள் உதயம் பி.செல்வம், ராமு என்கிற ராமசந்திரன் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story