பனைமரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து விரைவில் அரசாணை


பனைமரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து விரைவில் அரசாணை
x
தினத்தந்தி 24 May 2023 6:15 AM GMT (Updated: 24 May 2023 6:15 AM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

தமிழகத்தில் பனை மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து விரைவில் அரசாணை வெளியாகும் என்று நல வாரியத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறினார்.

ஆய்வுக்கூட்டம்

தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியத்தின் ஆய்வுக்கூட்டம் தர்மபுரி சுற்றுலா மாளிகையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவரும், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவருமான எர்ணாவூர் நாராயணன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் துணை ஆணையர்கள், அதிகாரிகள் மற்றும் பனை மர தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மூன்று மாவட்டங்களில் பனை மர தொழிலாளர்கள் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு பின் பனை மர தொழிலாளர்களுக்கு நலவாரிய உறுப்பினருக்கான விண்ணப்ப படிவங்களை தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் வழங்கினார்.

பேட்டி

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பனை மர தொழிலாளர்கள் நல வாரியம் முடக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த நல வாரியம் புத்துயிர் பெற்று வருகிறது. நான் 40 தொகுதிகளில் பனை மர தொழிலாளர்களை நேரில் சந்தித்து வாரியத்தில் இணைத்து வருகிறேன். கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களிலும் பனை தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். இவர்களையும் நேரில் சந்தித்து ஆய்வு செய்து வாரியத்தில் சேர்த்து, அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நான் பொறுப்பேற்றபோது 9 ஆயிரம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். தற்போது 20 ஆயிரம் பனை மரதொழிலாளர்கனை உறுப்பினர்களாக சேர்த்துள்ளோம்.

விரைவில் அரசாணை

தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பனை மரத்தை வெட்டக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்படி பனை மரம் வெட்ட வேண்டும் என்றால் கலெக்டர் அனுமதி பெற்று தான் வெட்ட வேண்டும்.

ராமநாதபுரத்தில் 1000 பனை மரம் வெட்டப்பட்டது. இது தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழக முதல்வர் பனை மரத்தை வெட்டக்கூடாது என கூறியுள்ளார். தமிழகத்தில் பனை மரங்களை வெட்டுவதற்கு தடை விதி்த்து அரசு ஆணையாக விரைவில் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கட்சியின் மாநில பொருளாளர் கண்ணன், தொழிற்சங்க செயலாளர் டேவிட் ஜெபராஜ், தர்மபுரி மாவட்ட செயலாளர் சங்கர், இளைஞர் அணி செயலாளர் கார்த்திகேயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story