ஐகோர்ட்டில் கூட்டம் கூடுவது ஏற்கத்தக்கதல்ல-நீதிபதிகள் கருத்து
ஐகோர்ட்டில் கூட்டம் கூடுவது ஏற்கத்தக்கதல்ல என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
தஞ்சையைச் சேர்ந்த பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு கும்பகோணம் கோர்ட்டு விதித்த தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான முடிவை எடுக்கும் வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் முன்பு கும்பகோணம் போலீசார் சிலர் நேரில் ஆஜராகியிருந்தனர். இதே போல மேலும் சில வழக்குகளின் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட போலீசார் கோர்ட்டில் இருந்தனர்.
இதைப்பார்த்த நீதிபதிகள், மதுரை ஐகோர்ட்டில் நடக்கும் பல்வேறு வழக்குகளுக்காக ஏராளமான போலீசார் ஆஜராக குவிந்துள்ளனர். அவர்களுக்கு போலீஸ் நிலையத்தில் ஏராளமான வேலைகள் இருக்கும். ஆனால் அவர்கள் அனைவரும் இங்கு கூட்டமாக கூடியிருப்பதால், மினி போலீஸ் நிலையம் போல இந்த கோர்ட்டு மாறிவிடுகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் இது போல கூட்டம் கூடுவது ஏற்கத்தல்ல, என தெரிவித்தனர்.