முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் சந்திப்பு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் சந்திப்பு
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் அன்னா ஜெர்டே சந்தித்து பேசினார்.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில், உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் அன்னா ஜெர்டே உலக வங்கியின் உயர்மட்ட குழுவினருடன் இன்று சந்தித்துப் பேசினார்.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (23.02.2024) முகாம் அலுவலகத்தில், உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் அன்னா ஜெர்டே, உலக வங்கியின் உயர்மட்ட குழுவினருடன் சந்தித்துப் பேசினார். அப்போது, உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு அரசின் சார்பில் தாம்பரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும், பணிபுரியும் பெண்களுக்கான குறைந்த வாடகையில், தரமான மற்றும் பாதுகாப்பான தங்கும் விடுதி திட்டமான "தோழி" விடுதியை பார்வையிட்டதாகவும், மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்துக்கு தனது பாராட்டினை தெரிவித்து, இத்திட்டம் உலக நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியான திட்டமாகும் என்று தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உலக வங்கியின் நிர்வாக இயக்குநரை வரவேற்று, தமிழ்நாட்டின் வேளாண் கடன் திட்டத்திற்க்கு 1971-ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டுக்கும் உலக வங்கிக்கும் நீண்டகால உறவு இருப்பது குறித்தும், அப்போதிலிருந்து மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கவும், சமச்சீரான பொருளாதார வளர்ச்சியை அடையவும் உலக வங்கி பல வெற்றிகரமான ஒத்துழைப்புகளை அளித்துள்ளது.

தற்போது, உலக வங்கி நிதியுதவியுடன் நடைமுறையுள்ள 8 திட்டங்கள் குறித்தும், மேலும் ஆலோசனை நடைபெற்றுவரும் 3 திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்து, அனைத்துத் திட்டங்களுக்கும் உலக வங்கியின் ஆதரவைத் தொடர்ந்து எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். மேலும், அவர்களது தமிழகப் பயணம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story