முக்குறுணி விநாயகருக்கு நாளை மெகா கொழுக்கட்டை படையல்


முக்குறுணி விநாயகருக்கு நாளை மெகா கொழுக்கட்டை படையல்
x

விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு நாளை மெகா கொழுக்கட்டை படைக்கப்பட உள்ளது. மேலும் நகரில் 350-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

மதுரை

விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு நாளை மெகா கொழுக்கட்டை படைக்கப்பட உள்ளது. மேலும் நகரில் 350-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

முக்குறுணி விநாயகர்

விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகர் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 8 அடி உயரமுள்ள விநாயகர் சிலை அப்படியே முழு உருவமாக மண்ணில் இருந்து கிடைத்தது. திருமலை நாயக்கர் மன்னர் தனது அரண்மனை கட்டுவதற்காக மண் எடுக்க தற்போதுள்ள தெப்பக்குளம் பகுதியில் தோண்டும் போது அந்த சிலையை கண்டார்.

அதனை மீனாட்சி அம்மன் கோவில் அம்மன் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். விநாயகர் சதுர்த்தி அன்று முக்குறுணி விநாயகருக்கு 18 படியால் ஆன பெரிய கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். அதற்கான பணிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. நாளை விநாயகர் சதுர்த்தியையொட்டி முக்குறுணி விநாயகருக்கு பெரிய கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.

விநாயகர் சிலைக்கு பலத்த பாதுகாப்பு

மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நகரில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுவது வழக்கம். அந்த சிலைகள் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு இன்று முதல் நிறுவப்பட உள்ளது. இந்த சிலைகளுக்கு அதனை நிறுவுபவர்கள் பூஜைகள் செய்து தினமும் பிரசாதம் வழங்குவர். மதுரை நகரில் 350-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இந்த ஒவ்வொரு சிலைக்கும் 24 மணி நேரமும் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவ்வாறு நகரில் 15000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர். இது தவிர சிலைகளை பாதுகாப்பாக ஆற்றில் கரைப்பது வரை போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். எனவே நகரில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர ரோந்து வந்து பலத்த பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

இது தவிர வில்லாபுரம் ஸ்ரீசங்க விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி காலை 9 மணிக்கு மேல் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெறுகிறது. மாலையில் உற்சவ விநாயகர் தேரில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வருவார்.


Related Tags :
Next Story