மேல்மலையனூர்அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் தை அமாவாசை ஊஞ்சல் உற்சவம்ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேல்மலையனூர்,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை விழா விமரிசையாக நடைபெறும்.
அதன்படி, தை மாதத்திற்கான அமாவாசை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
ஊஞ்சல் உற்சவம்
மேலும், உற்சவ அம்மனுக்கு காமாட்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இரவு 11 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மன் புறப்பாடு நடைபெற்று, அங்குள்ள ஊஞ்சல் மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார். பின்னர் அங்குள்ள ஊஞ்சலில் அமர்த்தினர். தொடர்ந்து பூசாரிகள் பக்தி பாடல்களை பாடியவுடன் அம்மன் ஊஞ்சலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி அருள்பாலித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், இரவு 12 மணிக்கு அம்மனுக்கு குங்குமம் மற்றும் பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அம்மன் உட்பிரகாரத்தில் வலம் வந்தவுடன் நிலையை அடைந்தார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலையில் 600-க்கும் மேற்பட்ட போலீசாரும், மேல்மலையனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சாமளவண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் செய்திருந்தனர்.
கலெக்டர் ஆய்வு
முன்னதாக நேற்று முன்தினம் காலையில் மாவட்ட கலெக்டர் மோகன் கோவில் வளாகத்தில் ஆய்வு செய்தார். அப்போது, பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய தேவையான ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார். ஊஞ்சல் உற்சவத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.