தி.மு.க. பவள விழாவையொட்டி நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 2 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க முடிவு-செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. தகவல்


தி.மு.க. பவள விழாவையொட்டி நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 2 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க முடிவு-செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. தகவல்
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

தி.மு.க. பவள விழாவையொட்டி நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 2 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக செயலாளர் ராஜேஷ்குமார்எம்.பி. தெரிவித்தார்.

தி.மு.க. பவள விழா

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா மற்றும் தி.மு.க. பவள விழாவையொட்டி 'உடன்பிறப்பாய் இணைவோம்' என்ற இயக்கத்தின் மூலம் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல் மஜித் தெரு அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். ராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

முகாமில் புதிதாக தி.மு.க.வில் சேர்ந்தவர்களுக்கான உறுப்பினர் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு, ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. இதில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் மணிமாறன், நகர செயலாளர்கள் பூபதி, சிவக்குமார், ராணா ஆனந்த்உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து ராஜேஷ்குமார் எம்.பி. கூறியதாவது:-

2 லட்சம் உறுப்பினர்கள்

தி.மு.க. பவள விழா ஆண்டு மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதிதாக உறுப்பினர்களை சேர்க்க தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் இன்று (நேற்று) முதல் ஜூன் 3-ந் தேதி வரை கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க உள்ளோம்.

அதற்காக நாமக்கல், ராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஒன்றிய, நகர மற்றும் பேரூராட்சிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மொத்தமாக 2 லட்சம் உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க முடிவு செய்துள்ளோம். காலாவதியான சுங்கச்சாவடிகளில் சுங்க வசூல் நடைபெறுவது குறித்து மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை நாங்கள் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

இவ்வாறு ராஜேஷ்குமார் எம்.பி. கூறினார்.


Next Story