தொழிலாளர்கள்நலவாரியங்களில் உறுப்பினராக சேரஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்:தூத்துக்குடி உதவி ஆணையர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தொழிலாளர்கள்நலவாரியங்களில் உறுப்பினராக சேரஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிலாளர் நலவாரியங்களில் சேராதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து உறுப்பினராக சேரலாம் என்று தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் க.திருவள்ளுவன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நலவாரியம்
கட்டுமான தொழிலாளர் நலவாரியம் உள்ளிட்ட 18 நலவாரியங்கள் மூலம் மாநில அரசு கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மரணம், விபத்து மரணம், மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதே போன்று கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தில் விபத்தில் மரணம் ஏற்பட நேரிட்டால் ரூ.5 லட்சம், தொழிலாளிரின் நியமனதாரர்களுக்கு இழப்பீடாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் வாரியத்தில் பதிவு பெறாத கட்டுமான தொழிலாளர்களுக்கும் பணியிடத்தில் ஏற்படும் மரண இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும் பணியிடத்தில் இறந்த தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்க கொண்டு செல்ல அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை போக்குவரத்து கட்டணத்தை வாரியமே ஏற்றுக் கொள்ளும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
உறுப்பினராகலாம்
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை உடலுழைப்பு மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு பெறாத தொழிலாளர்கள் அனைவரும் 18 தொழிலாளர் நலவாரியங்களில் தங்கள் பணி தொடர்புடைய நலவாரியத்தில் உறுப்பினராக தங்களை பதிவு செய்து கொண்டு. நலவாரியங்கள் மூலம் கிடைக்கும் நலத்திட்டங்களை பெறலாம். கட்டுமான தொழிலாளர் நலவாரியம் உள்ளிட்ட 18 தொழிலாளர் நலவாரியங்களில் உறுப்பினராக சேர tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.