சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவிடங்கள் மக்கள் பயன்படுத்தும் இடங்களாக மாற்றப்படும்; அமைச்சர் முத்துசாமி பேட்டி
சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவிடங்கள் மக்கள் பயன்படுத்தும் இடங்களாக மாற்றப்படும் என தீரன் சின்னமலை நினைவு தின விழாவில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவிடங்கள் மக்கள் பயன்படுத்தும் இடங்களாக மாற்றப்படும் என தீரன் சின்னமலை நினைவு தின விழாவில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
அமைச்சர் அஞ்சலி
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் நேற்று அறச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் அனுசரிக்கப்பட்டது. அங்குள்ள மணி மண்டபத்தில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு-ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலையின் நினைவு நாளையொட்டி சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல முறை ஓடாநிலைக்கு நேரில் வந்து தீரன் சின்னமலையின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உள்ளார்.
மாற்ற நடவடிக்கை
எனவே இந்த மணி மண்டப வளாகத்தை மேலும் மக்கள் பயன்படும் வகையில் மேம்படுத்த ஆர்வமாக உள்ளார். இங்குள்ள சிலை வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைக்கவும், தரையில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கவும் கோரிக்கைகள் வந்துள்ளன. இந்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். அதுமட்டுமின்றி முதல்-அமைச்சரின் ஆலோசனையின் பேரில் சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவிடங்கள் அனைத்தும் பிறந்த நாள், நினைவு நாட்களில் மட்டும் நினைவுகூரப்படும் இடங்களாக இல்லாமல், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வகையில் மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. அதன்படி அந்தந்த பகுதிகளில் மக்களுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள திருமண மண்டபங்கள், அருங்காட்சியகங்கள், நூலகம் உள்ளிட்டவைகள் அமைக்கப்படும். ஓடாநிலையிலும் இந்த தேவைகள் குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள தலைவர்களின் சிலைகள் வளாகத்தில் போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான நூலகம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
85 திட்டங்கள்
தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு ஈரோடு புறநகர் பஸ் நிலையம் உள்பட 85 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. நாங்கள் ஒவ்வொரு முறையும் முதல்-அமைச்சரை சந்திக்கும்போதும் அவர் கட்சி பணிகள் குறித்து கேட்பது இல்லை. மாறாக உங்கள் மாவட்டத்துக்கு என்ன திட்டம் தேவைப்படுகின்றது, வளர்ச்சி திட்டப்பணிகள் எப்படி நடக்கின்றது என்று கேட்டறிந்து திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
தி.மு.க.
தொடர்ந்து ஈரோடு மாவட்ட தி.மு.க. சார்பில் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அமைச்சர் சு.முத்துசாமி மாலை அணிவித்து, பூக்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வி.செல்வராஜ், ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம், இளைஞர் அணி மாநில நிர்வாகி கே.ஈ.பிரகாஷ் உள்பட ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்.