மதுரை வாலிபர் படுகொலையில் கூலிப்படை கைது
காரைக்குடியில் மதுரை வாலிபர் படுகொலையில் கூலிப்படையை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காரைக்குடி
காரைக்குடியில் மதுரை வாலிபர் படுகொலையில் கூலிப்படையை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை வாலிபர் கொலை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மைட்டான்பட்டியை சேர்ந்தவர் அறிவழகன் என்ற வினித் (வயது 27). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரைக்குடியில் நடைபெற்ற கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கோர்ட்டு உத்தரவுபடி காரைக்குடி தெற்கு போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்தார். இதற்காக தனது நண்பர்களுடன் காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார்.
கடந்த 18-ந் தேதி காலை 10 மணி அளவில் போலீஸ் நிலையம் செல்வதற்காக விடுதியில் இருந்து வெளியே வந்தார். அப்போது காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அறிவழகனை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது.
இதுகுறித்து அறிவழகனின் தந்தை போலீசில் புகார் செய்தார். புகாரில், மைட்டான்பட்டியை சேர்ந்த ஆதிநாராயணன் தரப்பினருக்கும், இவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவும், விருதுநகரில் மார்க்கெட் ஏலம் எடுப்பது தொடர்பாகவும் பிரச்சினை இருந்து வந்தது. விருதுநகர் சந்தை ஏலத்தை எடுக்க திட்டமிட்ட அறிவழகன் அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்ததால் இச்சம்பவம் நடந்து இருக்கலாம் என கூறினார். அதன் பேரில் மருதுசேனை தலைவர் ஆதிநாராயணன் உள்பட 10 பேர் மீது காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
9 பேர் கைது
மேலும் காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் விசாரணை நடத்தினார். கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள், செல்போன் பதிவுகள் ஆகியவற்றை கொண்டு பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.
இதையடுத்து மருதுசேனை அமைப்பின் தலைவர் ஆதி நாராயணனின் மைத்துனர் மதுரை மேலமாசி வீதியை சேர்ந்த தனசேகரன்(வயது 33) மற்றும் கூலிப்படையை சேர்ந்த மதுரை ஆனையூர் விக்னேஸ்வரன் (23) மதுரை கே.புதூர் சேதுபதி(25), திருமங்கலம் கங்குராம்பட்டி சரவணகுமார்(24), மதுரை ஊமச்சிகுளம் தினேஷ் குமார்(26), மதுரை அழகர்கோவில் ரோடு செல்வகுமார்(23), மதுரை பி.பீ. சாவடி நவீன் குமார்(24), மதுரை ஆழ்வார்புரம் அஜித்குமார்(27), திருமங்கலம் கங்குராம்பட்டியை சேர்ந்த ஸ்ரீதர்(19) ஆகிய 9 பேரை கைது செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய 2 கார்கள் மற்றும் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
தலைமறைவான மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் உள்பட பலரை போலீசார் தேடி வருகின்றனர்.