எண்ணூரில் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியல்


எண்ணூரில் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியல்
x

எண்ணூரில் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

சென்னை

சென்னை எண்ணூர் கத்திவாக்கம் பஜாரில் நூற்றுக்கும் மேற்பட்ட காய்கறி, பழம். பூ உள்ளிட்ட கடைகள் உள்ளன. நேற்று காலை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டி இருப்பதாக கூறி அந்த கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் வியாபாரிகள் சங்கத்தினர் எண்ணூரில் உள்ள அனைத்து கடைகளையும் மூடி விட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கடைகளை அகற்றுவதை மாநகராட்சி அதிகாரிகள் நிறுத்தக்கோரி செயலாளர் ரியாசுதீன் தலைமையில் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர், 2-வது வார்டு கவுன்சிலர் கோமதி சந்தோஷ் ஆகியோர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அங்கு வந்த மாநகராட்சி மண்டல உதவி ஆணையர் சங்கரன், செயற்பொறியாளர் பால் தங்கதுரை ஆகியோரிடம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் கடைகளை நோட்டீஸ் வழங்கி அளவு எடுத்து பின்னர் முறையாக அகற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு மாநகராட்சி அதிகாரிகள், இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு வியாபாரிகள் கலைந்து சென்றனர்.


Next Story