'தினத்தந்தி' செய்தி எதிரொலி: காரவள்ளி செல்லும் அரசு டவுன் பஸ் நேரம் மாற்றம்!
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக காரவள்ளி செல்லும் அரசு டவுன் பஸ் நேரம் மாற்றப்பட்டதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் அருகே ராமநாதபுரம் புதூரில் இருந்து கொல்லிமலை அடிவார பகுதியான காரவள்ளி வரை உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் சேந்தமங்கலம் மற்றும் ராமநாதபுரம் புதூரில் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு சென்று வர அரசு டவுன் பஸ்சை பயன்படுத்தி வந்தனர். அந்த பஸ் திடீரென்று கடந்த சில மாதங்களாக நேரத்தை மாற்றி சென்று வந்ததால் அந்த மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர். இது தொடர்பாக நேற்று முன்தினம் 'தினத்தந்தி'யில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று முதல் நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் வழியாக காரவள்ளிக்கு தினமும் சென்று வரும் அந்த அரசு டவுன் பஸ் இனி காலை 7.45 மணிக்கு காரவள்ளியில் இருந்து திரும்பி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல நேற்று அந்த நேரத்திற்கு பஸ் இயக்கப்பட்டது. இதனால் அங்குள்ள வழியோர கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை சரி செய்ய நடவடிக்கை எடுத்த போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.