14 உலோக சிலைகள் பறிமுதல்

தஞ்சையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 14 பழங்கால உலோக சிலைகளை சிலை திருட்டு தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர்;
தஞ்சையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 14 பழங்கால உலோக சிலைகளை சிலை திருட்டு தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
வெளிநாட்டில் சிலைகள் விற்பனை
ரிஷபதேவர், சிவகாமி அம்மன், மகாவீரர் ஆகிய சிலைகளை வெளிநாட்டில் விற்பனை செய்வதற்காக இந்திய தொல்லியல் துறைக்கு அந்த சிலைகள் பழங்கால சிலைகள் அல்ல என்பதற்கான சான்று கோரி கடந்த 2017-ம் ஆண்டு ஒரு விண்ணப்பம் வந்தது.இதுதொடர்பாக இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த சிலைகள் பழங்கால சிலைகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதற்கான சான்று வழங்கப்படவில்லை.
மறைத்து வைக்கப்பட்டிருந்த சிலைகள்
இதுகுறித்து அண்மையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சிலை திருட்டு தடுப்பு போலீசார் தஞ்சை மேம்பாலம் அருகேயுள்ள சிவாஜி நகரில் கணபதி என்பவர் நடத்தி வரும் கலைப்பொருள் விற்பனையகத்தில் விசாரணை நடத்தினர்.விசாரணையில், இந்த விற்பனையகத்தில் பழங்கால சிலைகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
14 உலோக சிலைகள் பறிமுதல்
இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, போலீஸ் சூப்பிரண்டு ரவி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மலைச்சாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு கதிரவன், இன்ஸ்பெக்டர் இந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை உள்ளிட்டோர் கணபதியின் கலைப்பொருள் விற்பனையகத்தில் இருந்த பெருமாள், ரிஷபதேவர், ரிஷபதேவர் அம்மன், சிவகாமி அம்மன், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், நந்தி, மகாவீரர், காலிங்க கிருஷ்ணர், நடன அம்மன் உள்பட 14 பழங்கால உலோக சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது
இந்த சிலைகள் தொடர்பான உரிய ஆவணங்கள் கணபதியிடம் இல்லை. இதனையடுத்து, கணபதியை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கைது செய்தனர்.






