கரும்பு பயிரை தாக்கும் வெள்ளைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்


கரும்பு பயிரை தாக்கும் வெள்ளைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
x
தினத்தந்தி 2 Aug 2023 12:15 AM IST (Updated: 2 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே கரும்புபயிரை தாக்கும் வெள்ளைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

கலந்துரையாடல்

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள கடுவனூர், பாக்கம், கானாங்காடு, புதுப்பட்டு, ரங்கப்பனூர், ராவத்தநல்லூர், சவேரியார்பாளையம் ஆகிய பகுதிகளில் கரும்பு பயிரில் வெள்ளைப்புழு தாக்குதலால் கரும்பு முழுவதும் காய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் கடுவனூர் கிராமத்தில் கரும்பில் வெள்ளைப்புழு, வேர்ப்புழு மேலாண்மை பற்றி வயல் ஆய்வு மற்றும் விவசாயிகளிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் கல்லூரி முதல்வரும், பூச்சியியல்துறை வல்லுனருமான முத்துகிருஷ்ணன் மற்றும் உதவி பேராசிரியர்கள், சங்கராபுரம் வேளாண்மை உதவி இயக்குனர்(பொறுப்பு) ஆனந்தன், உதவி இயக்குனர் ஷியாம்சுந்தர், மூங்கில்துறைப்பட்டு, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைகரும்பு அபிவிருத்தி அலுவலர் குருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கரும்பில் வெள்ளைப்புழு, வேர்ப்புழு தாக்குவது குறித்தும், அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

வெள்ளைப் புழுக்கள் கரும்பின் ஆதார வேர்களையும், கரும்பின் மண்ணில் புதைந்துள்ள கணுக்களையும் தின்று விடுகிறது. மேலும் வேர்கள் பாதிப்படைந்த பின்பு சோகைகள் முழுவதும் காய்ந்த நிலையில் காணப்படுகிறது. சோகைகள் வாடிய பின், கீழ் இலைகள் மஞ்சள்நிறமாக மாறி பின்னர் கரும்பு முழுவதும் காய்ந்து விடும். கரும்பு பயிர் ஆங்காங்கே திட்டு திட்டாக காய்ந்து காணப்படும். வேர்ப்பகுதி பாதிக்கப்படுவதால், கரும்பு பயிர்கள் முழுவதும் சாய்ந்து விடுகிறது.ஆரம்ப நிலை வெள்ளைப்புழுவை கட்டுப்படுத்த ஏக்கருக்கு ஒரு லிட்டர் மெட்டாரைசியம் என்ற பூஞ்சான் திரவத்தை 100 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் 500 கிராம் வேப்பம் புண்ணாக்குடன் கலந்து கரும்பின் வேருக்கு அருகாமையில் இட்டு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். மூன்றாம் மற்றும் நான்காம் நிலை வெள்ளைப்புழுவை கட்டுப்படுத்த இமிடாகுளாபிரிட் 17.8 எஸ்.எல். மருந்தினை 1 மி.லி. ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து பாதிக்கப்பட்ட கரும்பில் வேர்ப்பகுதியில் நன்கு நனையும்படி மருந்து கரைசலை ஊற்ற வேண்டும். மேலும் சுற்றியுள்ள வளமான கரும்பு தூர்களுக்கும் 5 சதுர அடி விட்டத்துக்கு வேர் பகுதியில் ஊற்ற வேண்டும் என்றனர். இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story