நீராதாரங்கள் பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியம்
நீராதாரங்கள் பராமரிப்பில் அலட்சியம் காட்டப்படுவதாக குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள்.
நீராதாரங்கள் பராமரிப்பில் அலட்சியம் காட்டப்படுவதாக குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
உடுமலை உட்கோட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று உடுமலையில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமை தாங்கினார்.
அப்போது நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து விவசாயிகள் பேசினார்கள். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரத்தை அடுத்த கூட்டத்தின் முதல் நிகழ்வாக தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள். பின்னர் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
உடுமலை, மடத்துக்குளம் பகுதி விவசாயிகள் பேசியதாவது:-
அறிவிக்கப்படாத மின்தடை
பி.ஏ.பி. கால்வாயில் நடைபெற்று வரும் பணிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எங்கு பணி நடைபெறுகிறது என்ற விவரத்தை அறிவிப்பு பதாகையில் வைக்க வேண்டும். கொப்பரை கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு பணம் வராததால் அவதிக்குள்ளாகியுள்ளனர். கொப்பரையை கொள்முதல் செய்ய முன் வர வேண்டும். ஆமந்தங்கடவு, அணிக்கடவு கிராம நிர்வாக அதிகாரிகள் அலுவலகத்தில் இல்லாததால் பொதுமக்களின் தேவைகள் பூர்த்தியாவதில் காலதாமதம் ஏற்படுகிறது. பூளவாடியில் அறிவிக்கப்படாத மின்தடையால் விவசாயிகள் அவதியடைகின்றனர். பி.ஏ.பி. கால்வாய்கள் ஆக்கிரமிப்பு தொடர் கதையாக உள்ளது.
இதுகுறித்து மனு அளித்தும் ஆக்கிரமிப்பை அகற்ற முன்வரவில்லை. வருவாய்த்துறையில் புரோக்கர்கள் ஆதிக்கத்திற்கு தீர்வு ஏற்படுத்துவதுடன் பொதுமக்களுக்கு உடனடியாக சான்றுகள் கிடைக்க செய்ய வேண்டும். உரம் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யும் கடைகளுக்கு முன்பு விற்பனை பட்டியல் வைக்க வேண்டும்.
சீரான குடிநீர்
கிராமப்புறங்களில் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். உடுக்கம்பாளையம் கிராமத்திற்கு இயக்கப்பட்டு வந்த தனியார் பஸ் ஒரு வருட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவு குடிநீர் செல்கிறதா என்று ஆய்வு செய்வதுடன் மீட்டர் பொருத்துவதற்கு முன் வர வேண்டும். பத்திரப்பதிவு முறையாக நடைபெற்றுள்ளதா என்று விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். சிறு குறு விவசாயி சான்று தற்போது 6 மாதம் மட்டுமே செல்லுபடியாகிறது. அதை ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும்.
வேளாண்மை, தோட்டக்கலை, பொறியியல் துறை ஒரே வளாகத்தில் அமைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரியில் நிர்வாக குளறுபடிகளை சீரமைக்க வேண்டும்.
நீராதாரங்கள்
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட குட்டையில் இருந்து மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். நீராதாரங்கள் முறையாக தூர்வாரப்படாததாலும் தண்ணீர் பற்றாக்குறையாலும் சாகுபடி குறைந்து காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. நீராதாரங்களை முழுமையாக தூர்வார முன்வர வேண்டும். உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் அதிகப்படியான வட்டியை வசூலிக்கின்றன. கடனுக்காக கொடுக்கும் ஆதார், ரேஷன்கார்டு, பத்திரம் போன்றவற்றை கடன் தொகை கட்டிய பின்பும் கொடுக்காமல் அலைக்கழிக்கிறார்கள். எனவே தனியார் நிதி நிறுவனங்களை ஆய்வு செய்ய வேண்டும்
இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.
கூட்டத்தில் தாசில்தார்கள் கண்ணாமணி (உடுமலை), செல்வி (மடத்துக்குளம்) சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விவேகானந்தன் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.