வாரச்சந்தை ஏலம் தொடர்பாக காரசார விவாதம்
உடுமலை நகர்மன்ற கூட்டத்தில் வாரச்சந்தை ஏலம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது.
உடுமலை நகர்மன்ற கூட்டத்தில் வாரச்சந்தை ஏலம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது.
நகர்மன்ற கூட்டம்
உடுமலை நகராட்சியின் 13-வது நகர்மன்ற சாதாரணக்கூட்டம் நகராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று காலை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் மத்தீன் தலைமை தாங்கி பேசினார். இதையடுத்து கடந்த கூட்டத்தின் போது ஒத்திவைக்கப்பட்ட மன்ற கூட்ட பொருள்கள் 1 முதல் 87 வரையிலும் மேலும் 88 முதல் 108 வரையிலும் உள்ள பொருள்கள் மன்ற விவாதத்திற்கு வைக்கப்பட்டது. அதன் பின்னர் விவாதம் தொடங்கியது.
கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:-
பணிகளை விரைவு படுத்தவேண்டும்
நகராட்சி வணிகவளாக ஏலம் வெளிப்படையாக விடப்படவில்லை என்றும் ஏலத்தை நிறுத்தி வைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தகவல் கொடுத்து மீண்டும் மறுஏலம் விட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து நகராட்சி தினசரி சந்தையில் நடைபெற்று வரும் கடைகள் கட்டுமான பணி தாமதமாக நடைபெறுவதால் பொதுமக்கள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பணிகளை விரைவு படுத்த வேண்டும். வெளி ஆட்களுக்கு வழங்கப்படுகின்ற சம்பளத்தில் பி.எப் பிடிக்க வேண்டும். உடுமலை நகராட்சிக்கு சொந்தமான நகர் அலுவலர் குடியிருப்பு பராமரிப்பு பணியை ஆய்வு செய்ய வேண்டும். அதேபோன்று நகராட்சி சொந்தமான குடிநீர் பிரிவு வாகனச் செலவினங்கள், 9-வது வார்டு நாராயணன் காலனியில் பொது சுகாதார வளாகம் அமைத்தல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பேசினார்கள்.
வாரச்சந்தை ஏலம்
அதைத்தொடர்ந்து பரபரப்புடன் பேசப்பட்டு வந்த நகராட்சி வாரச்சந்தையின் ஏலம் தொடர்பான 86-வது தீர்மானத்தை நகரச் செயலாளர் வேலுச்சாமி, ஜெயக்குமார், ஆறுச்சாமி, துணைத்தலைவர் கலைராஜன் ஆகியோர் முன்வைத்து பேசினார்கள். அப்போது நகராட்சி சந்தையின் குத்தகை கடந்த நிதியாண்டுடன் முடிவடைந்து விட்டது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அதே குத்தகை தொகையை செலுத்தி நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். அல்லது அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.
அதற்கு பதில் அளித்த நகர்மன்ற தலைவர் மத்தீன் இந்த விவாதம் தொடர்பாக நகராட்சி நிர்வாக ஆணையர் ஒப்புதலுக்கு அளிக்கப்பட்டு அனுமதி பெற்று நகராட்சி நிர்வாக ஆணையர் தெரிவிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலம் விடப்படும். இதனால் ஒப்பந்ததாரர் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக பரபரப்பாக பேசப்பட்ட சந்தை ஏலம் தொடர்பான விவாதம் சுமுகமான முடிவுக்கு வந்தது.
கூட்டத்தில் வின்சென்ட்ஜோசப், ஷாஜாதீ பர்வீன் உள்ளிட்ட நகரமன்ற உறுப்பினர்கள் அலுவலக அதிகாரிகள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.