மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா-ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்


மேட்டுப்பாளையம்  மைதானம் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா-ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்.

மைதானம் மாரியம்மன்

மேட்டுப்பாளையம் -ஊட்டி மெயின் ரோடு காந்தி மைதானத்தில் மைதானம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 92-ம் ஆண்டு பெருந்திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 21-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கம்பம் நடுதல், கொடியேற்றுதல், பால்குடம் எடுத்தல், குண்டம் திறத்தல், தேர் மகுடம் ஏற்றுதல், குண்டத்தில் பூ வளர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை யொட்டி பவானி ஆற்றங்கரையில் இருந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிம்ம வாகனத்தில் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த வண்ணம் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தது.

குண்டம் இறங்கிய பக்தர்கள்

அதன்பின்னர் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சிகள் காலை 8.30 மணிக்கு தொடங்கியது. கோவில் தலைமை பூசாரி மோகன் குமார் குண்டத்தை வலம் வந்து சிறப்பு பூஜைகளை செய்த பின்னர் குண்டத்தில் மல்லிகை மலர்ச்செண்டை வீசி அருளுடன் குண்டத்தில் இறங்கினார். அவரைத் தொடர்ந்து உதவி பூசாரிகள் மற்றும் ஆண், பெண் பக்தர்கள் தீ மிதித்தார்கள். ஒரு சிலர் குழந்தையை கையில் எடுத்துக்கொண்டு குண்டம் இறங்கினார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் தாசில்தார் மாலத, நகராட்சி ஆணையர் வினோத், கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருத்தேர் வடம் பிடித்தல்

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதன் கிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், நாளை (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு அம்மன் திருவீதி உலா, 7 -ந்தேதி மாலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு, மகா அபிஷேகம், 10 -ந் தேதி பகல் 12 மணிக்கு மறு பூஜை, அன்னதானத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றது.



Next Story