கடந்த 3 வாரங்களில்மேட்டூர் அணை நீர்மட்டம் 7¼ அடி குறைந்தது
மேட்டூர்
மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 3 வாரங்களில் 7¼ அடி குறைந்துள்ளது. நேற்று அணை நீர்மட்டம் 47.99 அடியாக உள்ளது.
மேட்டூர் அணை
காவிரி டெல்டா பாசன நீர் ஆதாரமாக மேட்டூர் அணை திகழ்கிறது. அணையின் நீர் இருப்பை பொறுத்து ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்கும், தொடர்ந்து கார் பருவ சாகுபடிக்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி அணையின் நீர் இருப்பு போதுமான அளவில் இருந்தது. இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணைக்கு நேரில் வந்து, காவிரி டெல்டா பாசனத்துக்கு அன்றைய தினம் தண்ணீரை திறந்து வைத்தார்.
இந்த நிலையில் கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை போதியளவு பெய்யவில்லை. இதனால் கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி ஆற்றில் வழக்கமாக தமிழகத்திற்கு சுப்ரீம் கோா்ட்டு தீர்ப்பின்படி திறந்து விடப்பட வேண்டிய தண்ணீரை கூட கர்நாடக மாநில அரசு திறந்து விடவில்லை. பெயரளவில் அவ்வப்போது மழையளவை பொறுத்து அந்த மாநில அரசு தண்ணீர் திறந்து விட்டு வந்தது.
நீர்வரத்து
இதனால் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் கேட்கும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் மேட்டூ்ர் அணையில் போதிய நீர் இருப்பு தற்போது இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக கடந்த மாதம் 16-ந் தேதி அணை நீர்மட்டம் 53.38 அடியாக குறைந்து இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 552 கனஅடி வீதம் மட்டுமே அப்போது நீர்வரத்து இருந்தது. அதே நேரத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டது.
அதன்பிறகு கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் ஓரளவு திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 60 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 6 ஆயிரத்து 428 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டமும் 47.99 அடியாக குறைந்தது. இதனால் அணை தற்போது நீர் குறைந்து குட்டைபோல் காட்சி அளிக்கிறது.
7¼ அடி குறைந்தது
அதாவது அணை நீர்மட்டம் கடந்த 3 வாரங்களில் சுமார் 7¼ அடி குறைந்துள்ளது. தற்போதைய நிலையில் காவிரி டெல்டா பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல்பயிரை காப்பாற்ற வருணபகவான் மனது வைக்க வேண்டும் என்று தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் மழையை எதிர்பாா்க்கின்றனர்.