மேட்டூர் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு: கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


மேட்டூர் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு: கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x

கோப்புப்படம்

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

சேலம்,

மேட்டூர் அணை கடந்த 12-ந் தேதி அதிகாலையில் இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால் நேற்று முன் தினம் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 23 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அணையை ஒட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி வீதமும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 33 ஆயிரத்து 500 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முதல் வினாடிக்கு 200 கனஅடியாக குறைக்கப்பட்டது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மீண்டும் மழை வலுத்துள்ளதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 1,10,000 கன அடிக்கு மேல் நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் 85 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் தற்போது 1.10 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இதனையடுத்து மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு 125000 கன அடியிலிருந்து 145000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மேட்டூர் அணை நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தொடர் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக, மேட்டூர் அணையில் இருந்து எந்நேரத்திலும் 1,70,000 கன அடி நீர் திறக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அணையில் இருந்து 1,45,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் மேலும் நீர் திறப்பு அதிகரிக்க கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை அறிவுறுத்தி இருந்தது.


Next Story