திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் மேயர் ஆய்வு
திருப்பூரில் மத்திய பஸ் நிலையத்தில் நேற்று காலை மேயர் தினேஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வணிக வளாகங்கள், பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் சுகாதார பணிகள், கழிப்பிடம் பராமரிப்பு, பஸ் நிலையம் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார்.
பொதுக்கழிப்பிடத்துக்குள் சென்று மேயர் பார்வையிட்டபோது அங்கிருந்த தண்ணீர் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டு கழிப்பிட கோப்பைகள் உடைந்து காணப்பட்டன. மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை உடைத்து சேதப்படுத்தியிருந்தனர். கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டது. அவற்றை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மதுப்பிரியர்களின் தொந்தரவு அதிகமாக இருப்பதால் பொதுக்கழிப்பிடத்துக்கு தனியாக காவலாளி நியமிக்கவும் ஆலோசனை நடத்தப்பட்டது. அங்குள்ள ஓட்டல்களையும் மேயர் ஆய்வு செய்து பணிகளை பார்வையிட்டார்.
பஸ் நிலையத்தில் மக்கள் காத்திருக்கும் பகுதியில் அலங்கோலமாக படுத்து தூங்குபவர்கள், தேவையில்லாத நபர்கள் தங்கியிருப்பது உள்ளிட்டவற்றை கவனித்து ஒழுங்குபடுத்த அறிவுறுத்தினார். மேலும் புதிதாக கட்டப்பட்ட கழிப்பிடத்தையும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடுவதற்கான ஏற்பாடுகளை செய்யும் அறிவுறுத்தினார். இருசக்கர அடுக்குமாடி வாகன நிறுத்தம் முன் தள்ளுவண்டி உணவக கடைகள் அமைக்கக்கூடாது என்று எச்சரித்தார்.
ஆய்வின்போது மாமன்ற கவுன்சிலர் கண்ணப்பன், சுகாதார அதிகாரி ராமசந்திரன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.