குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது


குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது
x

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழா சென்னை நந்தம்பாக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது.

சென்னை,

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு அளிப்பதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆற்றிடும் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27-ந் தேதி கொண்டாடப்படும் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

தொழில் தொடங்க மானியம்

விழாவில் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதியை நிலைநாட்டும் விதமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் முதல் 100 பயனாளிகளுக்கு ரூ.57.55 கோடி திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க ரூ.18.94 கோடி மானியத்திற்கான ஆணை வழங்கப்படுகிறது.

மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தேவையை கருத்தில் கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் கொடூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள 3 தொழிற்பேட்டைகள், குறுந்தொழில் குழும மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதல் குறுந்தொழில் குழுமமாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா காடம்புலியூரில் முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்கும் நோக்கோடு மெய் நிகர் கண்காட்சியகம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் தொடங்கிவைக்க உள்ளார்.

100 புரிந்துணர்வுஒப்பந்தங்கள்

பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வெற்றி பெற்ற 10 மாணவ அணிகளின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு முதல்-அமைச்சர் தலா ரூ.1 லட்சம் வழங்குகிறார். சமச்சீர் வளர்ச்சியை முன்னெடுக்கும் விதமாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அனைத்து தொழில் பிரிவுகளையும் உள்ளடக்கிய ஆயிரத்து 510 கோடி ரூபாய் மதிப்பில் 7 ஆயிரத்து 400 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 100 புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கடன் வசதியாக்கல் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவை விழாவில் மேற்கொள்ளப்பட உள்ளன.

ரூ.1,723 கோடி முதலீடு

தொழில் துறை வளர்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வண்ணம் மாநில அளவில் சிறந்த தொழில்முனைவோர் விருது, சிறந்த வேளாண்சார் தொழில் நிறுவனத்திற்கான விருது, சிறந்த மகளிர் தொழில்முனைவோர் விருது, தரம் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்திற்கான விருது, சிறப்பு பிரிவைச் சேர்ந்த சிறந்த நிறுவனத்திற்கான விருது ஆகிய விருதுகளும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதி வசதியை சிறப்பாக வழங்கிய 3 வங்கிகளுக்கான விருதுகளையும் முதல்-அமைச்சர் வழங்குகிறார்.

இந்த விழாவின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பில் ஆயிரத்து 723 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டு சுமார் 30 ஆயிரம் வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட உள்ளது.


Next Story