300 ஆண்டு பழமையான நடுகல் கண்டுபிடிப்பு


300 ஆண்டு பழமையான நடுகல் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

அகரம் கிராமத்தில் 300 ஆண்டு பழமையான ஏறுதழுவுதல் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி

அகரம் கிராமத்தில் 300 ஆண்டு பழமையான ஏறுதழுவுதல் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஏறுதழுவுதல் நடுகல்

ஏறுதழுவுதல் என்னும் வீர விளையாட்டு பண்டைத்தமிழர்களால் மிகவும் போற்றப்பட்டுவந்ததை சங்க இலக்கியங்கள் சிறப்பித்துப் பேசுகின்றன. இன்னும் சொல்லப்போனால், 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துசமவெளி நாகரீக காலத்திலேயே இவ்விளையாட்டு இருந்ததாக அறிஞர்கள் கூறுகிறார்கள். சங்க காலத்தில் கால்நடைகளே முக்கிய செல்வமாகக் கருதப்பட்டன. பயிர்த்தொழில், போக்குவரத்து மற்றும் உணவுப்பொருள் என அனைத்துக்கும் மக்கள் கால்நடைகளையே பெரிதும் சார்ந்து வாழ்ந்தனர்.

எனவே ஏறுதழுவுதல், ஆநிரைக் கவர்தல்(கால்நடைகளை களவாடுதல்), ஆநிரை மீட்டல் என தமிழர் வாழ்வியலில் இரண்டரக் கலந்துவிட்டவை கால்நடைகள். அக்காலத்தில் காளையை அடக்கும் இளைஞனே மாவீரனாகக் கருதப்பட்டான். இவ்வளவு சிறப்புமிக்க ஏறுதழுவுதலை சங்க இலக்கியங்கள் போற்றினாலும் அதுகுறித்த நடுகல் தடயங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் கிராமத்தில் ஏறுதழுவும் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து ஆய்வு செய்தன.

ஆற்றங்கரையோரம்

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:

காடுகளும், மலைகளும் நிறைந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கால்நடை வளர்ப்பு, ஆநிரைக் கவர்தல், ஆநிரை மீட்டல் ஆகியவற்றைக் குறிக்கும் வரலாற்றுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களும், வரலாற்றுக்கால நடுகற்களும் ஏராளமாய் கிடைத்தபோதும், தனிச்சிறப்பு வாய்ந்த ஏறுதழுவும் நடுகல் அறியப்படாமல் இருந்தது. தற்போது தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அகரம் கிராமத்தில் இந்த ஏறுதழுவும் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் 300 ஆண்டுகள் பழமையான இக்கல்வெட்டில், காளையானது பக்கவாட்டில் முன்னங்காலை தூக்கி ஓடுவது போல் காட்டப்பட்டுள்ளது. அதற்கு பின்னால் காளையை அடக்க முற்படும் வீரன் திமிலை இறுகப் பற்றிக்கொண்டு முன்னங்காலில் தனது கால்களை பின்னிக்கொண்டு தொங்குகிறான். இதனால் காளையின் நாக்கு வாய்க்கு வெளியே தொங்குகிறது. ஏறுதழுவுதல் என்னும் சொல்லுக்கு ஏற்ப இந்த நடுகல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வீரவிளையாட்டு

5,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஏறு தழுவுதல் உள்ளிட்ட வீர விளையாட்டுப்போட்டிகள் நடந்ததாக பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் தெரிவித்துள்ள நிலையில், தற்போது 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஏறு தழுவுதல் நிகழ்ச்சி நடந்ததற்கான கல்வெட்டை கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போன்ற வீரவிளையாட்டுக்கள் பாரம்பரியமாக நடந்து வந்துள்ளதையே இக்கல்வெட்டுகள் நமக்கு வெளிச்சமிட்டு காட்டுகின்றன என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வுப்பணியில், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத் தலைவர் நாராயண மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், சரவணகுமார், ராமச்சந்திரன், பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story