நள்ளிரவில் பரபரப்பு: குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு


நள்ளிரவில் பரபரப்பு: குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு
x

குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இந்த சத்தம் கேட்டு வீடுகளை விட்டு பொதுமக்கள் அலறியடித்தபடி வெளியேறினர்.

தேனி,

தேனி மாவட்டம் நாராயணதேவன்பட்டி நேசன் கலாசாலை பள்ளி வீதிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் புகுந்தனர். திடீரென் அவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை அந்த சாலையில் ஒரே இடத்தில் வீசிவிட்டு தப்பி சென்றனர். இதனால் அந்த பகுதியில் பலத்த வெடிசத்தம் கேட்டதுடன், கரும்புகை மூட்டம் எழுந்தது.

அப்போது வீடுகளில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள், பலத்த வெடிசத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அலறியடித்தபடி தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். உடனே இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

கதவுகள் சேதம்

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வெடிகுண்டுகள் வீசிய இடத்தை பார்வையிட்டனர். அப்போது 6 நாட்டு வெடிகுண்டுகள், வெடித்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வெடிகுண்டுகள் வெடித்ததில் அக்கம்பக்கத்து வீடுகளின் ஜன்னல் மற்றும் கதவுகள் சேதமடைந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விடிய, விடிய அங்கேயே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

எதற்காக வெடிகுண்டுகள் வீசப்பட்டது என்பது தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் வெடிகுண்டுகளை வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story