மிக்ஜம் புயல்...ரூ.6,000 நிவாரணம் - வெளியான முக்கிய தகவல்


மிக்ஜம் புயல்...ரூ.6,000 நிவாரணம் - வெளியான  முக்கிய தகவல்
x

விண்ணப்பதாரர்களின் அனைத்து விவரங்களையும் ரேஷன் கடை ஊழியர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து பதிவு செய்து வருகிறார்கள்..

சென்னை,

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டு வெள்ள நிவாரணம் பெற ரேஷன் கடைகளில் விண்ணப்பித்தவர்களின் வீடுகள் முன்பு புகைப்படம் எடுக்கும் பணி துவங்கியுள்ளது. மிக்ஜம் புயல் வெள்ள பாதிப்பால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரேஷன் கடைகள் மூலம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

இப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்டமாக ரேஷன் கடைகளில் விண்ணப்பித்த பொதுமக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்க அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது... சென்னையில் 4 லட்சத்து 90 ஆயிரம் பேரும், காஞ்சியில் 29 ஆயிரம் பேரும், திருவள்ளூரில் 22 ஆயிரம் பேரும், செங்கல்பட்டில் 14 ஆயிரம் பேரும் விண்ணப்பித்திருந்தனர்.

வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் என யாராக இருந்தாலும் அவர்களது வீடு, உடைமைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் 6 ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் என்று அரசு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் அரசு புதிதாக ஒரு செயலியை உருவாக்கியுள்ளது. அதில் விண்ணப்பதாரர்களின் அனைத்து விவரங்களையும் ரேஷன் கடை ஊழியர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து பதிவு செய்து வருகிறார்கள்... அதன்படி ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பம் எழுதிக் கொடுத்தவர்களை வீட்டின் அருகே நிறுத்தி புகைப்படம் எடுக்கும் பணி துவங்கி உள்ளது.

இந்தப் பணிகள் முடிவடைந்த பிறகு அவரவர் வங்கிக் கணக்கில் பணம் அனுப்பப்பட உள்ளது.




Next Story