கோவில்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2023 6:45 PM GMT (Updated: 17 Oct 2023 6:45 PM GMT)

கோவில்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டியில் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி இ. எஸ். ஐ. மருத்துவமனை முன்பு நேற்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார்.

பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ.45-ம், எருமை பாலுக்கு ரூ.54-ம் வழங்க வேண்டும். பால் கறவை மாடுகளுக்கு தரமான கால்நடை தீவனம் 50 சதவீதம் மானியத்தில் வழங்க வேண்டும்.

25.10.2017-இல் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி, சங்கங்களில் இருந்து பாலை வண்டியில் ஏற்றுவதற்கு முன்பாக தரத்தையும் அளவையும் குறித்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமசுப்பு, காமநாயக்கன்பட்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க நியூட்டன், ஈராச்சி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிங்கம், கடலையூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கனகராஜ், அம்மா மடம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க பாலமுருகன் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story