ஓசூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்து - 15 பேர் படுகாயம்...!


ஓசூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்து - 15 பேர் படுகாயம்...!
x

ஒசூரில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்களை ஏற்றிச்சென்ற மினி பஸ் நடுரோட்டில் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

கிருஷ்ணகிரி


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு கலைக்கல்லூரியில் இன்று அரசுத்துறை சார்பில் தனியார் பங்களிப்புடன் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், வேலையில்லா பட்டதாரிகள், பெண்கள், ஆண்கள் என 15,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, பர்கூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பஸ்கள் மற்றும் வேன்கள் மூலம் வேலை வாய்ப்பு முகாமிற்கு ஏராளமானோர் ஓசூருக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர், முகாம் முடிந்ததும் அதே வாகனத்தில் திருப்பி அழைத்துச் செல்லப்பட்டனர்.

அந்த வகையில் ஊத்தங்கரை அருகே உள்ள சாம்பல்பட்டி, குமாரபட்டி, நாடலப்பள்ளி, பசலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 15-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை வாய்ப்பு முகாமிற்கு வந்து இருந்தனர். முகாம் முடிந்ததும் அனைவரும் மினி பேருந்தில் ஊருக்கு திரும்பினார். அப்போது ஓசூர் ரிங் ரோடில், சீதாராம் நகர் பகுதியில் மினி பேருந்து வேகமாக சென்றபோது, சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், 3 வயது குழந்தை பிரித்கா அவரது தாயார் நதியா மற்றும் புனிதா, ராஜேஸ்வரி, தனலட்சுமி, மாரியம்மாள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுடன் மினி பேருந்தில் பயணம் செய்த ஒரு ஆணும் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அனைவரும் மீட்கப்பட்டு ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story