மினி பஸ் ஊழியர்கள் போராட்டம்
வாலிபர்கள் தாக்கியதை கண்டித்து மினி பஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
ஊட்டி
ஊட்டியில் இருந்து தலைகுந்தா, கேத்தி, எல்லநள்ளி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு 20 தனியார் மினி பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி ரெயில் நிலையம் பகுதியில் பணி முடிந்து திரும்பிய மினி பஸ் டிரைவர், கண்டக்டர்கள் சிலருக்கும், அந்த வழியாக வந்த வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கை கலப்பு ஏற்பட்டு வாலிபர்கள் டிரைவர், கண்டக்டர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதை கண்டித்து நேற்று காலை மினி பஸ் டிரைவர், கண்டக்டர்கள் ஊட்டி பஸ் நிலையம் அருகே சாலையோரம் மினி பஸ்களை நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மினி பஸ்களில் கிராமப்புறங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து டிரைவர், கண்டக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து தனியார் மினி பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பஸ்களை இயக்கினர்.
இதனால் ஊட்டி பஸ் நிலையத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.